

பெங்களூரு
கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அவையில் முதல்வர் குமாரசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று பலத்த பாதுகாப்புடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அவையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் குமாரசாமி ‘‘நான் பதவியில் இருக்கிறேனா அல்லது பதவி விலகுகிறேனா என்பது முக்கியமல்ல. இருப்பினும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஜனநாயகம் எப்படி சூறையாடப்படுகிறது என்பதை உணர்த்துவதே எனது நோக்கம். அதற்கான களமாக சட்டப்பேரவை விவாதத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்’’ எனக் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா குறுக்கிட்டு வாக்கெடுப்பை இன்றைய தினமே நடத்த வேண்டும், கால தாமதம் செய்வதன் மூலம் ஆளும் கூட்டணி சூழ்ச்சி செய்கிறது’’ என்றார்.
இதற்கு பதிலளித்த குமாரசாமி, ‘‘விவாதம் என்றால் ஏன் பதறுகிறீர்கள், விவாதிக்க தானே சட்டப்பேரவை உள்ளது. ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதை பற்றி பேச எனக்கு முழு உரிமை உள்ளது’’ என்றார். அப்போது ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களும், பாஜக எம்எல்ஏக்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.