

பெங்களூரு
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் 104 தொகுதிகளை வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அதற்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைக்காத நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கைகோத்தன காங்கிரஸும் மஜதவும். காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மஜத 38 தொகுதிகளிலும் வென்றிருந்த நிலையில், இரண்டும் சேர்ந்து ஆட்சி அமைத்தன.
மஜதவின் எச்.டி.குமாரசாமி முதல்வரானார். பொதுவாகவே, எண்ணிக்கையில் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, கூட்டணிக்குத் தலைமை வகித்தாலே அந்தக் கூட்டணிக்கு அற்ப ஆயுள்தான். அது மட்டுமல்லாமல் அன்றாட நிர்வாகத்தைக்கூட கவனிக்க முடியாதபடி பெரிய தோழமைக் கட்சி தன்னுடைய இருப்பை வலியுறுத்துவதற்காக, சுதந்திரமாகச் செயல்பட முடியாமலும் முக்கிய முடிவுகளை எடுக்கவிடாமலும் தடுத்துக்கொண்டே இருக்கும்.
காங்கிரஸுக்கும் மஜதவுக்கும் இடையில் உரசல்களும் கருத்துவேறுபாடுகளும் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. அமைச்சர் பதவி கிடைக்காத ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
தனது அரசின் ஆயுளை உறுதிசெய்வதற்காக சுயேச்சை உறுப்பினர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி தந்தார் குமாரசாமி.
இதுவே அவரது அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியது. காங்கிரஸில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு இது கசப்பை உருவாக்கியது. பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குமாரசாமி அரசுக்கு எதிராக களமிறங்கினர். விஜய்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அனந்த் சிங் ராஜினாமா செய்தார். அடுத்த சில தினங்களில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என ஆனந்த் சிங் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ரமேஷ் ஜார்கிஹோளியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் மட்டுமின்றி மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களும் பதவி விலகினார். இதனால் அடுத்தடுத்து ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த சூழலில், ஆட்சியைக் கைப்பற்ற இதுதான் சமயம் என்று செயலில் இறங்கியிருக்கிறது பாஜக. ஆளும் கூட்டணியிலிருந்து மேலும் சில உறுப்பினர்கள் பதவி விலகினாலே பாஜகவுக்குப் பெரும்பான்மை கிட்டிவிடும். பிறகு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பாஜக கருதுவதாக தெரிகிறது. அதேசமயம் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ் - மஜத கூட்டணி.