

பெங்களூரு
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில் அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் குமாராமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில், 224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.
அண்மையில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், 2 சுயேச்சைகளும் ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால், குமாரசாமி அரசின் பலம் 100-ஆக குறைந்துள்ள அதே வேளை 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் உள்ள 16 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கும்பட்சத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் குமாரசாமிக்கு நேற்று மாலை நிலவரப்படி, அந்த எண்ணிக்கையில் ஆதரவு கிடைக்காததால் அவரது ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி மீண்டும் காங்கிரஸூக்கு திரும்புவதாக கூறியுள்ளார். அவர் இன்று சட்டப்பேரவைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும் பெரும்பான்மையை நிருபிக்க போதுமான எம்எல்ஏக்களின் பலம் ஆளும் கூட்டணிக்கு இல்லை என்பதால் கர்நாடக அரசியலில் உச்சபட்ச பரபரப்பு நிலவுகிறது.