Published : 18 Jul 2019 08:43 AM
Last Updated : 18 Jul 2019 08:43 AM

மல்லிகார்ஜுன கார்கே, சுஷில்குமார் ஷிண்டே, அசோக் கெலாட் உட்பட காங். தலைவர் பதவிக்கான பரிசீலனையில் 8 பேர்: காரிய கமிட்டி கூட்டத்தில் இறுதி முடிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

ராகுல் காந்தியின் ராஜினாமாவால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எட்டு பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இறுதி முடிவு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு பின் நடைபெறும் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு படுதோல்வி ஏற்பட்டது. இதற்கு பொறுப்பு ஏற்ற அதன் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதை அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்க மறுத்தும் ராஜினாமாவை ராகுல் வாபஸ் பெறவில்லை. புதிய தலைவர் காந்தி குடும்பத்தில் இல்லாத வகையில் தேர்ந்தெடுக்கவும் ராகுல் வலியுறுத்தி வருகிறார். இதனால், சுமார் இரண்டு மாதங்களாக சரியான தலைமை இல்லாத நிலை காங்கிரஸில் உள்ளது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது அக்கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற் பட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் மூத்த, முக்கிய தலைவர்கள் எட்டு பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

மூத்த தலைவர்களில் மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மக்களவை சபாநாயகரான மீரா குமார் மற்றும் சுமார் 20 வருடங்களாக தேசிய பொதுச்செயலாளராக உள்ள முகுல் வாஸ்னிக் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இவர்களில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் என்எஸ்யூஐ ஆகியவற்றின் தேசிய தலைவராக உள்ள முகுல் வாஸ்னிக் தலைவர் பதவிக்கு வர காந்தி குடும்பத்தினர் அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இளம்தலைமுறைகளில் ராஜஸ்தானின் துணை முதல்வர் சச்சின் பைலட், தேசியப் பொதுச்செயலாளர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மற்றும் மிலிந்த் தியோரா ஆகியோர் உள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘இந்த எட்டு பேர்களும் தமக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களில் யாரை குறிப்பிட்டாலும் ராகுல் எதிர்ப்பு காட்ட மாட்டார். மூத்த தலைவர்களில் அசோக் கெலாட்டின் பெயர் முதலாவதாக உள்ளது.

ஆனால், அவர் தம் முதல்வர் பதவியை இழக்கத் தயாராக இல்லை. இரண்டாவ தாக சுஷில்குமார் ஷிண்டேவும், இளம் தலைமுறையில் சிந்தியாவின் பெயரும் முக்கியமாக இடம்பெற்றுள்ளன’’ எனத் தெரிவித்தனர்.

அடுத்து மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் புதிய தலைவரை அமர்த்துவது காங்கி ரஸுக்கு கட்டாயமாகி விட்டது. இதில் கட்சிக்கு கிடைக்கும் வெற்றி, மக்களவை தேர்தலில் தனக்கு ஏற்பட்ட நிலையில் லேசான மாற்றம் அல்லது மத்திய அரசிற்கு எதிரான எதிர்ப்புகள் விரைவில் வரும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இந்தநிலை ஏற்பட்டால் மீண்டும் காந்தி குடும்பத்தில் இருந்து கட்சிக்கு தலைவர் அமர்த்தப்படும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, தற்போது அமர்த்தப்படும் புதியவர் ஒரு இடைக்காலத் தலைவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x