

புதுடெல்லி
வறுமையை ஒழிக்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரி வித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 2019-20 நிதியாண்டுக்கான வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (100 நாள்) திட்டத் துக்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ள தாக சில உறுப்பினர்கள் குறிப் பிட்டனர். அவர்கள் கடந்த ஆண் டுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கடந்த ஆண்டு ரூ.55 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்டத் துக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் இப்போது பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளது. இப்போது, 99 சதவீத பயனாளிகளுக்கான கூலி அவர் களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால், இடைத்தரகர்கள் குறுக் கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் ஏழைகளுக்கான இந்த திட்டம், நீண்ட காலத்துக்கு தொடர்ந்து செயல்படுத்தப்படமாட் டாது. ஏனென்றால், வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் பெண்கள் சுயஉதவிக் குழுக் கள் சிறப்பாக செயல்பட்டு வரு கின்றன. அவர்களுக்கு இதுவரை சுமார் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங் கப்பட்டுள்ளது. அவர்கள் கடனை முறையாக குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்தி வருகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் திருப்பிச் செலுத்தாத கடன் (என்பிஏ) அளவு என்ன என்பதை இந்த அவையில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் என்பிஏ வெறும் 2.7 சதவீதமாக உள்ளது. இவர்களிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.