Published : 18 Jul 2019 07:14 AM
Last Updated : 18 Jul 2019 07:14 AM

அதிருப்தி எம்எல்ஏக்களை வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது; ராஜினாமாவை ஏற்க உத்தரவிட முடியாது: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இரா.வினோத்

புதுடெல்லி

கர்நாடக அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சட்டப்பேரவை தலை வருக்கு உத்தரவிட முடியாது. அதே போல, அதிருப்தி எம்எல்ஏக் களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்குமாறு கொறடா மூலம் கட்டாயப்படுத்தவும் கூடாது என இரு தரப்புக்கும் பாதகமில்லா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கடந்த இரு வாரங்களில் 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இதனால், கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக வினர் மும்பைக்கு அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

அங்குள்ள அதிருப்தி எம்எல்ஏக் கள் பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட 15 பேர், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘‘சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தங்களது ராஜினாமாவை ஏற்காமல் வேண்டுமென்றே கால தாமதம் செய்து வருகிறார். குமார சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், அதனை காப்பாற்றும் வகையில் பேரவைத் தலைவர் நடந்து கொள்கிறார். எனவே, ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்குமாறு சட்டப்பேர வைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேரவைத் தலைவர் சார்பில் அளிக் கப்பட்ட மனுவில், ‘‘அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங் களின் தன்மையை ஆராய வேண்டியுள்ளதால், உடனடியாக ராஜினாமா குறித்து முடிவெடுக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத் தின்படி செயல்படும் பேரவைத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது'' என பதிலளித்தார்.

இந்த வழக்கானது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான அமர்வு முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப் போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, பேரவைத் தலைவர் சார் பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கர்நாடக முதல்வர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் உள்ளிட்டோர் ஆஜராகி விரிவாக விவாதித்தனர்.

பாதகமில்லா தீர்ப்பு

இருதரப்பு விவாதமும் முடி வடைந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங் கிய அமர்வு நேற்று 3 பக்க அள விலான தீர்ப்பை வழங்கியது.

அதில், ‘‘அதிருப்தி எம்எல்ஏக் களின் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பேரவை தலைவருக்கே உள்ளது. ராஜினாமா கடிதங்களை ஏற்க குறிப்பிட்ட கால அளவு எதனையும் நிர்ணயிக்க முடியாது. எனவே, அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. பேரவைத் தலைவரே உரிய‌ கால அளவை நிர்ணயித்துக் கொண்டு முடிவு எடுக்கலாம்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்தவாறு வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம். ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக் கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட கட்சிகளின் கொறடா மூலம் கட் டாயப்படுத்தக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, இரு தரப்புக்கும் பாதகமில்லா தீர்ப்பை வழங்கி இருக்கிறோம். இது இடைக்கால தீர்ப்பு மட்டுமே. இவ்வழக்கில் பேரவைத் தலைவரின் அதிகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவை குறித்து பின்னர் விரிவாக விசாரணை நடத்தப்படும்.

விசாரணையின் போது உச்சநீதி மன்றம் வாய்மொழியாக எழுப்பிய கேள்விகளை கருத்தில் கொள்ளா மல், பேரவைத் தலைவர் அரசமைப் புச் சட்டத்தின்படி செயல்பட வேண் டும். அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது பேரவைத் தலை வர் எடுக்கும் நடவடிக்கையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று தீர்ப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ‘‘அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி'' என வரவேற்று உள்ளார்.

இதே போல, மும்பையில் தங்கி யுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், நம் பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் கர்நாடக காங் கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ‘‘இந்த வழக்கை உச்சநீதிமன்றம் வித்தியாசமாக அணுகியுள்ளது. கொறடா உத்தரவை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீறுவதற்கு இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது. அரச மைப்புச் சட்டத்தின் 10-வது அட்ட வணையின்படி, கொறடா உத்தர வுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் இப்போது கேள்விக்குறியாகி யுள்ளது. கொறடாவின் உத்தரவை எப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் சட்டப்பேரவையின் செயல் பாட்டில் நீதிமன்றம் எப்படி தலை யிட முடியும்?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்படி நடக்கும்

இதுகுறித்து பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றம் எனக்கு கூடுதலான பொறுப்புணர்ச்சியை வழங்கியுள் ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படியும், கர்நாடக சட்டப்பேரவை விதிமுறைகளின்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். எம்எல்ஏக் களின் ராஜினாமா விவகாரத்தில் உரிய விதிமுறைகளின்படி, உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும்'' என்றார்.

பேரவையில் இன்று பலப்பரீட்சை

கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று பலத்த பாதுகாப்புடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

முதல்வர் குமாராமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

தற்போதைய நிலையில், 224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.

அண்மையில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், 2 சுயேச்சைகளும் ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால், குமாரசாமி அரசின் பலம் 100-ஆக குறைந்துள்ள அதே வேளை 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் உள்ள 16 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கும்பட்சத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் குமாரசாமிக்கு நேற்று மாலை நிலவரப்படி, அந்த எண்ணிக்கையில் ஆதரவு கிடைக்காததால் அவரது ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x