

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள சல்கவான் என்ற கிராமத்தில் பள்ளியில் இருந்த கைபம்பில் அடித்து நீரைக் குடித்ததில் இரண்டு குழந்தைகள் பலியாக 52 பேர் கவலைக்கிடமாகியுள்ளனர்.
செவ்வாய் மதியம் நடந்த இந்தப் பரிதாப சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். அலிகார் தலைமை மருத்துவ அதிகாரி எம்.எல்.அகர்வால் ‘குழந்தைகள் அந்த நீரைக் குடித்தவுடன் வாந்தி எடுத்தனர்’ என்றார்.
இதனையடுத்து மருத்துவக் குழு கிராமத்துக்கு விரைந்து வந்தது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை மருத்துவக் குழு அந்த கிராமத்திலேயே தங்கியிருக்கக் கோரப்பட்டுள்ளார்கள்.
கன மழை பெய்ததன் காரணமாக சாக்கடை நீர், குழாய் நீரில் கலந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சிகிச்சையில் இருக்கும் குழந்தைகள் அபாயக் கட்டத்தை கடந்துவிட்டதாக அகர்வால் தெரிவித்தார்.
-பிடிஐ