

புதுடெல்லி
உ.பி.யின் ராம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் (பிஎஸ்பி) மெகா கூட்டணி வைத்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி (எஸ்.பி.) போட்டியிட்டது. இதில், பிஎஸ்பிக்கு 10 தொகுதிகளும், எஸ்.பி.க்கு முன்பை விடக் குறைவாக 5 தொகுதிகள் மட்டும் கிடைத்தன.
இதில் ராம்பூரில் வெற்றி பெற்ற எஸ்.பி.யின் ஆசம்கான் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இப்பதவியை அவர் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக வகித்தவர். இதனால், அதன் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் எஸ்.பி.க்கு உருவாகியுள்ளது. இதற்கு ஏதுவான வேட்பாளராக தனது மனைவி டிம்பிளை ராம்பூரில் போட்டியிட வைக்க அகிலேஷ் முடிவு செய்துள்ளார்.
குடும்ப அரசியல் புகார் எஸ்.பி.யில் எழுந்தபோது, தேர்தலில் இனி டிம்பிள் போட்டியிட மாட்டார் என அகிலேஷ் கூறியிருந்தார். எனினும், டிம்பிளை கடைசி நேரத்தில் கன்னோஜ் தொகுதியில் மீண்டும் அகிலேஷ் போட்டியிட வைத்தார். ஆனால், அங்கு டிம்பிள் பாஜக வேட்பாளர் சுப்ரத் பாதக்கிடம் சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், ராம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் டிம்பிளை நிறுத்தினால், அவரை காங்கிரஸ் எதிர்த்துப் போட்டியிடாது என எஸ்.பி. எதிர்பார்க்கிறது. ஏனெனில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு ஆதரவாக அவர்களது ரேபரேலி மற்றும் அமேதி மக்களவைத் தொகுதியில் மெகா கூட்டணி தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இதனிடையே, ஆசம்கானை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற பாஜக வேட்பாளரான நடிகை ஜெயப்பிரதா அங்கு மீண்டும் போட்டியிட விரும்புகிறார். இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டிம்பிளை எதிர்க்கும் சரியான வேட்பாளராக ஜெயப்பிரதா இருப்பார் என அவரது கட்சியும் கருதுகிறது.
எஸ்.பி.யில் போட்டியிட்டு 2004, 2009 என இருமுறை மக்களவை எம்.பி.யான ஜெயப்பிரதா, கடந்த தேர்தலில் பாஜகவில் இணைந்தார். தனது தோல்விக்கு பிறகும் ராம்பூருக்கு அடிக்கடி வந்து அங்குள்ள மக்களைச் சந்தித்து வருகிறார் ஜெயப்பிரதா.
எனவே, ராம்பூர் தொகுதியில் கடுமையான போட்டி நிகழும் வாய்ப்புகள் உள்ளன.
-ஆர்.ஷபிமுன்னா