

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை(ஜூலை 18) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவே வெல்லும் என மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேவேளையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா மூலம் உத்தரவு ஏதும் சபாநாயகர் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து பி.எஸ்.எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது, "உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். கர்நாடக முதல்வர் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டார். பெரும்பான்மை இல்லாதபோது அவர் ராஜினாமா செய்வதே சரி. இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கும் இது தார்மீக வெற்றி. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெல்வது நிச்சயம். இருப்பினும் இது இடைக்கால உத்தரவே. உச்ச நீதிமன்றம் எதிர்காலத்தில் சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து வரையறுக்கும்" என்றார்.
சர்ச்சையும் தீர்ப்பும்..
முன்னதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் கடந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இவர்களில் 15 பேர் தங்களது ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவையின் பலம் என்ன?
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரப்படி, உறுப்பினர்களின் எண்ணிக்கை 207 ஆக உள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் 106. இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளதால் பாஜவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அக்கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.
அதேவேளையில், எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் பாஜக வலுவான நிலையில் உள்ளது.