

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா.வின் சட்ட அங்கமான சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் அப்துல்காவி அகமது யூசுப் தீர்ப்பை வாசிப்பார். நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற 15 நீதிபதிகளும் தலைமை நீதிபதியின் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்வர். இல்லாவிட்டால், தங்களது ஆதரவு அல்லது எதிர்ப்பு கருத்துகளை வாசிப்பார்கள். இந்த 15 பேர் குழுவில் பாகிஸ்தான் பிரதிநிதியும் இடம் பெற்றிருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வாசிக்கும் நேரம் சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கூட இருக்கலாம் என சர்வதேச நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கின்றது.
முன்னதாக கடந்த மார்ச் 2017-ல், பாகிஸ்தான் நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை தற்காலிகமாக ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்றும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்து ஜாதவை விடுவிக்க பாகிஸ்தானுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என இந்திய தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே வேளையில், பாகிஸ்தான் அரசோ இந்தியாவின் மனுவை சர்வதேச நீதிமன்றம் நிராகரிக்கும் என எதிர்பார்க்கிறது. இருதரப்பில் எதிர்பார்ப்பு வலுத்துள்ள நிலையில் இன்று மாலை தீர்ப்பு வெளியாகிறது.
குல்பூஷன் ஜாதவ் வழக்கு பின்னணி:
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (48). இவர் தங்கள் நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததால், ஜாதவை கைது செய்ததாக, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். ஆனால், ஈரானிலிருந்து ஜாதவை பாகிஸ்தான் கடத்திச் சென்றதாக இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, ஜாதவ் மீதான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017 ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் (ஐசிஜே) இந்திய அரசு வழக்கு தொடுத்தது. இதையடுத்து, ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஐசிஜே இடைக்கால தடை விதித்தது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் இரண்டு வாதங்கள்..
குல்பூஷன் ஜாதவ் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவரை கைது செய்த பிறகு, தூதரக ரீதியாக அணுக பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக 13 முறை நினைவூட்டப்பட்ட போதிலும் பதில் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் தீர்ப்பின் விவரம் குறித்தும் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, தூதரக அணுகுதல் மீதான வியன்னா உடன்படிக்கையை மீறும் செயல் ஆகும். ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சர்வதேச சட்டங்களின் வரையறைக்குள் வராது என இரண்டு வாதங்களை முன்வைக்கிறது.
இன்னும் சில மணி நேரங்களில் யாருடைய வாத்த்தை சர்வதேச நீதிமன்றம் ஏற்கிறது என்பது தெரிந்துவிடும்.