

பெங்களூரு
ஐஎம்ஏ நகைக்கடை மோசடி வழக் கில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிடம் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள சிவாஜிநகரில் இயங்கிய ஐஎம்ஏ நகை கடை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த தாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜயசங்கர், ஐபிஎஸ் அதிகாரி நாகராஜ் உட் பட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐஎம்ஏ நிறு வனத்தின் உரிமையாளர் மன்சூர் கான் வெளியிட்ட வீடியோவில், சிவாஜி நகர் எம்எல்ஏவும் முன் னாள் அமைச்சருமான ரோஷன் பெய்கிற்கு தேர்தல் நிதியாக ரூ. 400 கோடி வழங்கியதாக தெரிவித்தார். இதனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜராகுமாறு ரோஷன் பெய்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கு ரோஷன் பெய்க், ‘‘கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் எனது எம்எல்ஏ பதவியை அண்மையில் ராஜி னாமா செய்தேன். அரசியல் ரீதி யான பிரச்சினைகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தால், உடல் ரீதியாக சோர்வடைந் துள்ளேன். எனவே விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்'' என எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரினார்.
ரோஷன் பெய்க் கைது
இதையடுத்து ரோஷன் பெய்க் மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக் கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு செல்ல முடிவெடுத்தார். இதற்காக நேற்று முன் தினம் இரவு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷூடன் பெங்களூரு சர்வதேச விமான நிலை யத்துக்கு வந்தார். விமானத்தில் ஏற முயன்ற ரோஷன் பெய்க்கை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இணை ஆணையர் கிரீஷ் கைது செய்தார்.
பின்னர் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்து நேற்று பிற்பகல் 2 மணி வரை விசாரித்தனர். அப்போது ஐஎம்ஏ நிதி மோசடி குறித்தும், ரூ.400 கோடி பணம் வாங்கியது குறித்தும் கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ரோஷன் பெய்க் விடுவிக்கப்பட்டார்.
பாஜக துணை நிற்கிறது
இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறும்போது, ‘‘ஐஎம்ஏ நிதி மோசடி வழக்கில் ரோஷன் பெய்க் கைதானபோது எடியூரப்பா வின் உதவியாளர் சந்தோஷ், பாஜக எம்எல்ஏ யோகேஷ்வரும் உடன் இருந்துள்ளனர். அதிகாரி களைப் பார்த்தவுடன் பாஜக வினர் அங்கிருந்து தப்பி ஓடியுள் ளனர். மோசடி வழக்கை எதிர் நோக்கியுள்ள ரோஷன் பெய்க் தப்பிப்பதற்கு பாஜக துணை நிற்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. கர்நாடக அரசை பலவீனப்படுத்த பாஜக முயல்கிறது''என விமர்சித் துள்ளார்.
- இரா.வினோத்