

புதுடெல்லி
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடக சட்டப்பேர வையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் கடந்த இரு வாரங்களில் அடுத் தடுத்து ராஜினாமா செய்தனர். இந் நிலையில் மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட 15 பேர் தங்களது ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவ ருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன் றம், அதிருப்தி எம்எல்ஏக்கள் கடந்த 12-ம் தேதி பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் முன்னிலையில் நேரில் ஆஜராகி ராஜினாமா கடி தம் அளிக்க உத்தரவிட்டது. இதை யடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். அதற்கு பேரவைத் தலைவர், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜி னாமா கடிதங்களின் தன்மையை ஆராய வேண்டியுள்ளதால், உட னடியாக ராஜினாமா குறித்து முடிவெடுக்க முடியாது என தெரிவித்தார்.
இதற்கு உச்ச நீதிமன்றம், ''இது அரசியலமைப்பு சார்ந்த விவகாரம் என்பதால் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே 16-ம் தேதி வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நட வடிக்கை எடுக்கக் கூடாது'' என கருத்து தெரிவித்தது. இந்நிலையில் ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட மேலும் 5 எம்எல்ஏக்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க சட் டப்பேரவைத் தலைவருக்கு உத்தர விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, 15 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை யிலான அமர்வு நேற்று விசா ரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் முகுல் ரோத்தகி கூறிய தாவது:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 190-ன்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு தங்களது பதவியை ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. அவ்வாறு செய்யப்பட்ட ராஜி னாமாவை ஏற்றுக்கொள்வதைத் தவிர பேரவைத் தலைவருக்கு வேறு வழியே இல்லை. ராஜினாமா கடிதங்களை எம்எல்ஏக்கள் தாமாக கொடுத்துள்ளனரா அல்லது மிரட்டலின் பேரில் கொடுத்துள்ள னரா என்பதை மட்டுமே அவரால் ஆராய முடியும். மற்றபடி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
கடந்த 6-ம் தேதி வழங்கிய ராஜினாமா கடிதத்தின் மீது கூட பேரவைத் தலைவர் இன்னும் முடிவெடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந் துள்ள நிலையில், அந்த அரசை காப்பாற்றுவதற்காக பேரவைத் தலைவர் இவ்வாறு செய்கிறாரா என சந்தேகம் எழுகிறது. எனவே உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் முன்மாதிரியான தீர்ப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதற்கு பேரவைத் தலைவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக் களின் ராஜினாமா முடிவின் பின் னணியில் பாஜக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே அதிருப்தி எம்எல்ஏக்களில் 11 பேர் கடந்த 12-ம் தேதி பேரவை தலைவர் முன்னிலையில் ஆஜராகி ராஜினாமா கடிதம் அளித்தனர். இதுவரை மீதமுள்ள 4 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை.
இந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நட வடிக்கையை தவிர்க்கவே ராஜினாமா செய்திருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் பேரவைத் தலைவர் எப்படி அவசரமாக முடிவெடுக்க முடியும்? அரசியல் உள்நோக்கத்தோடும், சுய லாபத்தோடும் ராஜினாமா செய்திருந்தால் பேரவைத் தலை வர் அதனை ஆராய்ந்தே முடி வெடுக்க முடியும். எனவே உடனடி யாக ராஜினாமாவை ஏற்க வேண் டும் என பேரவைத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடி யாது''என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “எம்எல்ஏக்களின் ராஜினாமா கடித விவகாரத்தில் பேரவைத் தலைவர் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட முடியாது. இதனை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். பேரவைத் தலைவர் ஒருவரின் ராஜினா மாவை நிராகரித்தாலோ, தகுதி நீக்கம் செய்தாலோ மட்டுமே நீதி மன்றம் தலையிட முடியும்.
அதேவேளையில் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் சரியாக இருக் கும்போது, அதில் முடிவெடுப் பதற்கு ஏன் பேரவைத் தலைவர் கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின் அதி காரத்தை நீதிமன்றத்துக்கு நினைவுபடுத்தும் பேரவைத் தலைவர், அதனை ஏன் அவர் பின்பற்றாமல் இருக்கிறார்? எனவே இரு தரப்புக்கும் பாதகமில்லாத தீர்ப்பை பிறப்பிப்போம். அதன்படி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்''என்றார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜி னாமா மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. குமாரசாமி அரசின் எதிர்காலத்தை தீர்மானிக் கப் போகும் தீர்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இரா.வினோத்