

புதுடெல்லி
ஆந்திர மாநில ஆளுநராக ஹரிசந்திரனும், சத்தீஸ்கர் ஆளுநராக உய்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநராக நரசிம்மன் நீண்ட நாட்களாக பதவி வகித்து வந்தார். இந்தநிலையல் ஆந்திரா மாநிலத்துக்கு புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் பிஸ்வா பூஷண் ஹரிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மத்திய பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வந்தார். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புதிய ஆளுநராக அனுசுயா உய்கே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
ஹரிச்சந்திரன் ஒடிசா மாநில பாஜக மூத்த தலைவர் ஆவார். 1971-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனசங்கத்தின் மூத்த தலைவராக இருந்த அவர் 1980-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை ஒடிசா மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார்.
ஒடிசா மாநிலம் சிலிகா தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் முந்தைய பிஜூ ஜனதாதளம் - பாஜக கூட்டணி அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
உய்கே மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர். தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார்.