Published : 16 Jul 2019 06:35 PM
Last Updated : 16 Jul 2019 06:35 PM

ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் மனிதரை கொன்று தின்ற ஆட்கொல்லி புலி: வனத்துறை தேடுதல் வேட்டை

டேராடூன்

உத்தரகண்ட் மாநிலத்தில் மனிதரை கொன்று தின்ற ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான இது, 1936-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உத்தராகண்டம் மாநிலத்தில், மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, எய்லி தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டது. பின்னர் புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரும், இயற்கைப் பாதுகாவலரும் ஜிம் கார்பெட் பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

புலி, சிறுத்தைகளே இந்த பூங்காவின் முக்கிய விலங்குகளாக உள்ளன. மான்கள், யானைகள், கரடிகளும் பிற சிறு விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. இந்த பூங்காவில் அவ்வப்போது விலங்குகள் மனிதர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் சோகன் சிங் என்ற கூலித்தொழிலாளி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது அவரை புலி ஒன்று அடித்துக் கொன்றுள்ளது. அத்துடன் அவரது உடலில் பாதியையும் அந்த புலி சாப்பிட்டுள்ளது. பாதி சாப்பிட்ட நிலையில் அவரது உடலை வனத்துறையினர் கைபற்றியுள்ளனர்.  மனித உடலை அந்த புலி சாப்பிட்டுள்ளதால் அது ஆட்கொல்லி புலியாக மாறியுள்ளது.

அடர்ந்த வனப்பகுதியில் வாழும் புலி எப்போதாவது கிராமத்துக்குள் வந்து ஆடு, கோழி, மாடு போன்றவற்றை அடித்துக் கொல்வது வழக்கம். இதுபோன்ற புலி சில சமயங்களில் மனிதர்களை கொல்வது அரிதான சம்பவம். அவ்வாறு மனிதர்களை புலி கொன்று விட்டால் தொடர்ந்து அது மனித வேட்டையாடுவதை வாடிக்கையாக வைத்துவிடும்.

எனவே மனித உடலை ருசித்த புலிகளை உடனடியாக கொன்று விடுவதை வனத்துறை வழக்கமாக கொண்டுள்ளனர். உத்தரகண்ட் தொடங்கி தமிழகம் வரை ‘மேன் ஈட்டர்’ எனப்படும் ஆட்கொல்லி புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. தமிழக - கர்நாடக எல்லை பகுதியிலும் முன்பு ஆட்கொல்லி புலிகள் கொல்லப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் யவடாமால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவாடா வனப்பகுதியில் பெண் புலி ஒன்று ஆட்கொல்லியாக மாறியது. ஆவ்னி என பெயரிடப்பட்ட இந்த பெண் புலி 13 பேரை வேட்டையாடி ருசித்தது. இந்த புலியை அண்மையில் வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x