

திஸ்பூர்
அசாமில் பெய்து வரும் கனமழையால் இங்குள்ள பிரசித்தி பெற்ற காசிரங்கா உயிரியில் பூங்கா 90 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
உத்தர பிரதேசம், பிஹார், அசாம் என வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கங்கை உட்பட முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பிஹாரிலும் மழையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
அசாமில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன. லட்சக்கணக்கா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர், நல்பாரி, கோலாஹாட், மஜூலி, நௌகான், மோரிகான் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் பிரம்மபுரத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரம்மபுத்திராவில் பாதுகாப்பு காரணங்களுக்காக படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அசாம் வெள்ளத்தில் காசிரங்கா உயிரியில் பூங்கா மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. கோலாகாட் மற்றும் நககோன் மாவட்டங்களில் இந்த உயிரியல் பூங்கா பரவியுள்ளது. உலக அளவில் காண்டா மிருகங்கள் அதிகஅளவில் வசிப்பது இங்கு தான். உலகின் மிகப்பெரிய காண்டா மிருக உயிரியல் பூங்காவாக இது விளங்கி வருகிறது.
அசாமில் தற்போது பெய்து வரும் கனமழையால், இந்த பூங்காவின் 90 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்குள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை 17 உயிரினங்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அசாம் முழுவதும் வெள்ள மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. முதல்வர் சர்பானந்த சோனேவாலிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.