

புதுடெல்லி
நல்ல தரமான சாலைகள் வேண்டுமென்றால் சுங்க கட்டணத்தை மக்கள் செலுத்துவது அவசியம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கேள்வி எழுப்பினர். ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் வெவ்வேறு விதமான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் கூறினர். சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். இதற்கு மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைத் திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும்.
சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும். சேவைகளுக்கு ஏற்பவும், செய்யபடும் செலவுக்கும் ஏற்பவும் இது மாறுபடுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க முழுமையாக அரசால் முதலீடு செய்ய முடியாது. இதனால் தான் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நல்ல தரமான சேவைகள் வேண்டும் என்றால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம். எனவே சுங்க கட்டண முறை ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் பேசினார்.