

அஞ்சல்துறை தேர்வை தமிழில் நடத்தக் கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அவை அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த அஞ்சல்துறை தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதால் தேர்வை ரத்துச் செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவைத் தலைவரின் உத்தரவுகளை மீறியும் அதிமுகவினர் அவையில் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக நேற்றும் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் தமிழக எம்.பி.கள் அஞ்சல்துறை தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.