

புதுடெல்லி
கிராமப்புற வங்கிகளை தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் தனது கேள்வியில், கிராமப்புற வங்கிகளை பலப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன எனவும் வினவி இருந்தார்.
இதற்கு இணை நிதிஅமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
''பிராந்திய கிராமப்புற வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. மாநிலத்துக்குள்ளிருக்கும் கிராமப்புற வங்கிகள் அனைத்தையும் இணைத்து அதன் மூலம் அவற்றின் செலவைக் குறைக்கவும், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது
இந்த வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி அளித்து, அவற்றின் மூலதனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் அலுவலர்களுக்கு நபார்டு வங்கி மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து அவற்றுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க தேசிய அளவிலான கூட்டங்களை நபார்டு வங்கியும், மாநில அளவிலான கூட்டங்களை அதிகாரம்பெற்ற குழுவும் நடத்துகின்றன''.
இவ்வாறு அனுராக் சிங் தாக்கூர் பதிலளித்துள்ளார்.
- ஆர்.ஷபிமுன்னா