

ஐஃபோனுக்காக டெல்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தங்களது சக நண்பரைக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.
டெல்லி மோத்தி நகர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுவர் விக்கி (15). கடந்த இரண்டு நாட்களாக விக்கியைக் காணவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் பசாய் தாராபூர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் சிறுவன் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து 3 சிறுவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுவர்கள் விக்கியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். விக்கி வைத்திருந்த ஐஃபோனை தங்களுடையதாக்கிக் கொள்ள விரும்பியதாகவும் விக்கியிடன் ஃபோனைக் கொடுத்துவிடுமாறு கேட்டதாகவும் ஆனால் விக்கி அதற்கு மறுக்கவே அவரை கொலை செய்துவிட்டதாகவும் கூறினர்.
சிறுவர்கள் அனைவரும் சிறார் சட்ட திட்டத்தின்படி வழக்கு விசாரணைக்குப் பின்னர் கூர்நோக்குப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிகிறது.