Published : 16 Jul 2019 10:07 AM
Last Updated : 16 Jul 2019 10:07 AM

விமானப்  போக்குவரத்துக்கு வான்வெளியை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்: இந்திய விமானங்கள் விரைவில் இயக்கம்

புதுடெல்லி


புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மூடப்பட்ட வான்வெளியை பயணிகள் விமான போக்குவரத்துக்கு திறந்துவிட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் விமானங்களுக்கு இருக்காது. 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி  தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதச் செய்து வெடிக்கச் செய்தத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.431 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை இந்தியா நீக்கியது. ஆனால், பாகிஸ்தான் தனது வான் எல்லையை யணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை. 

இதனால், பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது. இந்தநிலையில் இந்தியாவில் இருந்தும் இயக்கப்படும் பயணிகள் விமானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதனை உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த தடை நீக்கம் ஜூலை 16-ம் தேதி காலைமுதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களும் சுற்றிக் கொண்டு செல்லாமல் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x