சாலை விதிகளை மீறினால் கடும் அபராதம்; மக்களவையில் மோட்டார் வாகன திருத்த மசோதா மீண்டும் தாக்கல்

சாலை விதிகளை மீறினால் கடும் அபராதம்; மக்களவையில் மோட்டார் வாகன திருத்த மசோதா மீண்டும் தாக்கல்
Updated on
1 min read

புதுடெல்லி

சட்டத்தை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரிக்க வகை செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. 

பிரதமர் மோடி தலைமையிலான முதல் ஆட்சியில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்நிலையில், மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். 

மோட்டார் வாகன சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பது, இணையதளம் வழியாக பழகுநர் உரிமம் வழங்குவது, காப்பீடு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன. 

இதுபோல சாலை விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளரோ அல்லது அவரது காப்பீட்டு நிறுவனமோ ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் இது வகை செய்கிறது.

இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சவுகதா ராய் மற்றும் மஹுவா மொய்த்ரா ஆகியோர் தெரிவித்தனர். மசோதாவின் சில அம்சங்களை மட்டும் எதிர்ப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் கட்கரி பேசும்போது, “மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்களின் பரிந்துரை அடிப்படையில்தான் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த மசோதா குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது” என்றார். - பிடிஐ

என்ஐஏ-வை வலுப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலை விசாரிப்பதற்கான அதிகாரம் அளிப்பதன் மூலம் என்ஐஏ-வை (தேசிய பாதுகாப்பு முகமையை) வலுப்படுத்தும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த என்ஐஏ சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது அரசியல் பழி தீர்ப்பதற்காக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் எம்.பி.க்கள் சிலர் குறிப்பிட்டனர்.

அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்கையில், “பொடா சட்டத்தை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றது. துஷ்
பிரயோக புகாரின் அடிப்படையில் இந்த சட்டம் திரும்பப் பெறப்படவில்லை. 

வாக்கு வங்கியை காப்பதற்காகவே திரும்பப் பெறப்பட்டது. ஆனால் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ஐஏ ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அப்போதைய அரசுக்கு  ஏற்பட்டது. 

எனவே என்ஐஏவுக்கு அதிகாரம் அளிக்க நாம் ஒன்றுபட்டு நிற்பதை பயங்கரவாதிகளுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in