

புதுடெல்லி
அஞ்சல் துறை சார்பில் ஊரக பகுதிகளுக்கான அஞ்சலர், உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வழக்கத்துக்கு மாறாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழில் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து தேர்வு நடைபெறுவதற்கு ஓரிரு தினங்கள் முன்பு திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தது.
இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, “அஞ்சல் துறை பணிகளுக்கு 14-ம் தேதி நடைபெற்ற தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதற்கான காரணம் எளிமையானது, மிகவும் கட்டாயமானது. தமிழில் வினாத்தாளை வழங்கி இந்தத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்” என்றார்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது, “இதற்கு முன்பு நடைபெற்ற அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என அரசு திடீரென அறிவித்தது. இது தமிழ்நாடு இளைஞர்கள் மனதில் போராட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.
ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழக இளைஞர்கள் ஏற்கெனவே கருதி வரும் நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களை மேலும் வருத்தப்பட வைத்துள்ளது. எனவே, அந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழில் வினாத்தாள் வழங்கி மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “உறுப்பினர்கள் எழுப்பி உள்ள பிரச்சினை மிகவும் முக்கியமானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஏற்கெனவே பேசி உள்ளேன். அவருடன் பேசுங்கள்” என்றார். - பிடிஐ