

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக முதல்வர் குமாரசாமி வரும் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கு கோரி, தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தர விட்டுள்ளார். இதனால் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கடைசி முயற்சியாக அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். 2 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் தங்களது ஆதரவை திரும்ப பெற்றதால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பெரும் பான்மையை இழந்த குமார சாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளது.
16 எம்எல்ஏ-க்களின் ராஜினாமா குறித்து இதுவரை முடிவெடுக்காத பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், 8 எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை நிராகரித்தார். இதனிடையே, பேரவைத் தலைவர் தங்களது ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்க உத்தரவிடக் கோரி 15 அதி ருப்தி எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், முதல்வர் குமாரசாமி, “எங்களது எம்எல்ஏ-க்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்கட்சியினரின் சந்தே
கத்தை போக்கும் வகையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என கடந்த 12-ம் தேதி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவகுமார், பரமேஷ்வர், சித்தராமையா உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிருப்தி எம்எல்ஏ-க்களை சமாதானப்படுத்தும் முயற்சி யில் இறங்கினர்.
எடியூரப்பா அதிருப்தி
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக கர்நாடகா சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நேற்று நடை பெற்றது. இதில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது எடியூரப்பா, “குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் இன்றே (திங்கள் கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனக்கூறி, குமாரசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பேரவைத் தலைவரிடம் மனு அளித்தார்.
2 நாள் அவகாசம்
அதற்கு குமாரசாமி, “எங்கள் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் சிலர் தவிர்க்க முடியாத பணி காரணமாக வெளியூரில் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது. வரும் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கு கோர தயாராக இருக்கிறேன்” என்றார். இதையடுத்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், “வரும் 18-ம் தேதி காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரி, தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். இதனால் அதி ருப்தி அடைந்த எடியூரப்பா அங்கிருந்து கோபத்தோடு வெளியேறினார்.
அவை ஒத்திவைப்பு
நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதால் பெங்களூரு சொகுசு விடுதிகளில் தங்கியுள்ள காங்கிரஸ், மஜத, பாஜக எம்எல்ஏ-க்கள் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர். மும்பையில் உள்ள 14 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட 18 பேர் அவைக்கு வரவில்லை. பிற்பகல் 12.30 மணிக்கு அவை தொடங்கியதும் பாஜகவினர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும், குமாரசாமி பதவி விலகக் கோரியும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, 18-ம் தேதி நம்பிக்கை வாக்கு நடைபெற உள்ளதால், அவை அன்று வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பேர
வைத் தலைவர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
குமாரசாமி கடைசி முயற்சி
இதையடுத்து, குமாரசாமி தனது ஆட்சியைக் காப்பாற்ற கடைசிகட்ட முயற்சியில் இறங்கியுள்ளார். பெங்களூரு மற்றும் மும்பையில் தங்கி யுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். ராஜினாமா செய்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்த 2 சுயேச்சை
எம்எல்ஏ-க்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமாக அமையாததால் குமாரசாமி வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குமாரசாமி தலைமை யிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 116 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது. இப்போது 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளதால், குமாரசாமி அரசின் பலம் 100-ஆக குறைந்துள்ளது. பாஜகவுக்கு 105 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்த நிலையில், தற்போது 2 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் அதன் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.