

பெங்களூரு
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் ஜூலை 18-ம் தேதி காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமா ஏற்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை வரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கு தேவையான நடவடிகைகளை ஆளும் கூட்டணி செய்து வருகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ள நிலையில் சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர். முதல்வர் குமாரசாமி உடனடியாக நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களை ராஜினாமா முடிவை திரும்ப பெறாத நிலையில் பெரும்பான்மையை நிருபிக்க மேலும் சில காலம் அவகாசம் எடுத்துக் கொள்ள ஆளும் கூட்டணி முடிவு செய்தது.
இந்தநிலையில் குமாரசாமி அரசு உடனடியாக சட்டப்பேரவையில் நம்பிக்கையை பெற வேண்டும் என பாஜக சார்பில் சட்டப்பேரவை நடவடிக்கை குழுவிடம் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் வரும் 18-ம் தேதி காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். முன்னதாக, முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில் ‘‘வரும் 18-ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணி அரசு வெற்றி பெறும்’’ எனக் கூறினார்.