தொழில்நுட்பக் கோளாறு; சந்திராயன் - 2 விண்ணில் ஏவுவது நிறுத்திவைப்பு

தொழில்நுட்பக் கோளாறு; சந்திராயன் - 2 விண்ணில் ஏவுவது நிறுத்திவைப்பு
Updated on
1 min read

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காராணமாக  சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. வேறொரு நாளில் சந்திராயன்- 2 விண்ணில் ஏவப்படும் என்றும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பைச் சுற்றி வந்து ஆய்வு செய்த அந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து, படம் எடுத்து அனுப்பியது.

சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதையடுத்து, அதிநவீன வசதிகளு டன் ரூ.610 கோடி செலவில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
இதை விண்ணில் செலுத்த 4 முறை திட்டமிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அனைத்து விதமான சோதனைகளும் முடிந்தநிலையில், விண்ணில் ஏவப்படுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் இன்று (15-ம் தேதி) அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. 

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இஸ்ரோ மையத்தில் இருந்தபடி, சந்திரயான்-2 புறப்படுவதை அவர்கள் நேரில் பார்வையிடுவதற்காகத் தயாராக இருந்த நிலையில், அதிகாலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திராயன் - 2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. வேறொரு நாளில் சந்திராயன் - 2 விண்ணில் ஏவப்படும் என்றும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in