

பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு இந்திய யாத்ரீகர்கள் விசா இல் லாமல் செல்ல அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ் தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், தமது கடைசிகாலத்தில் அப்பகுதி யில் வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவாக அங்கு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக் கப்பட்டுள்ளது.
சீக்கியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கர்தார்பூர் குருத் வாராவுக்கு சென்று தரிசிக்க வேண்டும் என்பது அவர்களின் புனித கடமைகளில் ஒன்றாக கருதப் படுகிறது.
இதற்காக, பஞ்சாபில் இருந்து நேரடியாக கர்தார்பூர் செல்வதற்கு வழித்தடம் அமைக்குமாறு இந்தியத் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனை பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இந்த வழித்தடம் அமைப்பதற்கு இரு தரப்பிலும் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கர்தார்பூர் குருத்வாராவுக்கு செல்லும் இந்திய யாத்ரீகர்களின் பாதுகாப்பு, பயண நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளையும் சேர்ந்த அரசு அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாகாவில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. அப்போது, கர்தார்பூர் குருத்வாராவுக்கு விசா இல்லாமல் இந்திய யாத்ரீகர்கள் செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. மேலும், நாளொன்றுக்கு 5,000 இந்தியர்கள் கர்தார்பூர் குருத்வார வுக்கு செல்லவும் அந்நாடு இசைவு தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, கர்தார்பூருக்கு செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்திய அதிகாரிகள் வலியுறுத் தினர். மேலும், காலிஸ்தான் ஆதர வாளர்கள் மற்றும் தீவிரவாதி களால் யாத்ரீகர்களுக்கு அச்சுறுத் தல் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கு மாறும் பாகிஸ்தான் அதிகாரி களிடம் தெரிவிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர் நீக்கம்
இதனிடையே, இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சார்பில் உயர்நிலைக் குழு அமைக் கப்பட்டது. அதில், காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரான கோபால் சிங் சாவ்லாவும் இடம் பெற்றிருந்தார்.
இதற்கு இந்தியா சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை அந்தக் குழு விலிருந்து பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் நீக்கியது.