மும்பை சொகுசு விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு: கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்வர் குமாரசாமிக்கு சிக்கல்

கர்நாடக முதல்வர் குமாரசாமி
கர்நாடக முதல்வர் குமாரசாமி
Updated on
3 min read

 இரா.வினோத்

பெங்களூரு

மும்பையில் அதிருப்தி காங்கிரஸ், மஜத‌ எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் நேற்று மேலும் 3 எம்எல்ஏக்கள் இணைந்ததால், அங்கு தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிப்பதில் முதல் வர் குமாரசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மஜத எம்எல்ஏக்களும் கடந்த இரு வாரத்தில் ராஜினாமா செய்துள்ள னர். 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்களது ஆதரவை திரும்ப பெற்ற தால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பெரும்பான் மையை இழந்த குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி யுள்ள பாஜக, 107 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் ராஜினாமா செய்த 11 காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை, பாஜக நிர்வாகிகள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். பேரவைத் தலைவர் தங்களது ராஜினாமா கடிதத்தை உடனடியாக‌ ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் முறையிட்டுள்ளனர். இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி, மீண்டும் கட்சிக்கு அழைத்து வரும் பணியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவகுமார், பரமேஷ்வர், சித்தராமையா உள்ளிட்டோர் தொடங்கியுள்ளனர்.

முதல்வர் குமாரசாமியும் அதிருப்தி மஜத எம்எல்ஏக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக் கள் அனைவரும் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சமாதானப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என தெரிகிறது.

பின்வாங்கிய எம்எல்ஏ

இதனிடையே டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் ஹொசக் கோட்டை எம்எல்ஏ எம்.டி.பி. நாக ராஜை சந்தித்து பேசினார். அப்போது நாகராஜ் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்வதாகக் கூறினார். மேலும் சிக்கப்பள்ளாப்பூர் எம்எல்ஏ சுதா கரையும் தன்னுடன் காங்கிரஸுக்கு அழைத்து வருவதாக தெரிவித்தார். இதனால் காங்கிரஸார் உற்சாகம் அடைந்த நிலையில், எம்.டி.பி. நாகராஜ் நேற்று பாஜக பக்கம் சாய்ந்துள்ளார்.

முன்னாள் பாஜக துணை முதல் வர் அசோக் நேற்று அதிகாலை எம்.டி.பி.நாகராஜை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் தனி விமானம் மூலம் மும்பைக்குச் சென்றனர். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, சோமசேகர் உள்ளிட்டோரும் மும்பை சொகுசு விடுதியில் ஐக்கியமாகி உள்ளனர். இதன்மூலம் அங்கு இருக்கும் அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ள‌து.

இதனால் அதிர்ச்சி அடைந் துள்ள காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் பாஜகவினர் கட்டுப்பாட்டில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படி தொடர்பு கொள்வது என யோசித்து வருகின்றனர். கடந்த சில தினங் களுக்கு முன் டி.கே.சிவகுமார் சென்றபோது சொகுசு விடுதியின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அங்கு மகாராஷ்டிர போலீஸாரும், இளைஞர் பாஜகவினரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் விடுதியின் உள்ளே நுழைவது சிரமமாக உள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள மூத்த எம்எல்ஏக்களான ரோஷன் பெய்க், ராமலிங்க ரெட்டி ஆகியோரை சமாதானப் படுத்தும் முயற்சியில் துணை முதல்வர் பரமேஷ்வர் இறங்கி யுள்ளார். இருவரையும் நேற்று தனித்தனியாக சந்தித்து பேசிய அவர், காங்கிரஸுக்கு திரும்பி வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இருவரும் யோசித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளனர்.

இதனிடையே டி.கே.சிவகுமார் தனது ஆதரவாளரான முனி ரத்னாவை மனமாற்றம் செய்யும் பணியில் இறங்கியுள்ளார். அவரும் காங்கிரஸுக்கு வருவது குறித்து உறுதியாக பதில் அளிக்காததால் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. பாஜக மாநில தலைவர் எடியூரப்பா திங்கள்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிவரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் இன்னும் தங்கள் பக்கம் வராததால் குமாரசாமி வருத்தம் அடைந்துள்ளார்.

இன்று காங்கிரஸ் கூட்டம்

அதிருப்தி எம்எல்ஏக்களை சமா தானப்படுத்துவதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மும்பையில் உள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலி யுறுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இதனிடையே மும்பையில் உள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பைரத்தி பசவராஜ் கூறும்போது, ‘‘எக்காரணம் கொண்டும் எங்களது ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற மாட்டோம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் பங் கேற்க மாட்டோம். எங்களது மனு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வரவிருப்ப தால், அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்'' என தெரிவித் துள்ளார்.

முதல்வர் குமாரசாமிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பது சிக்கலாக மாறியுள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவாரா அல்லது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடிக் கிறது.

எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்கத் தயார்: டி.கே.சிவகுமார்

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் நீண்ட காலம் காங்கிரஸில் இருந்தவர்கள். கட்சிக்காக ஒவ்வொருவரும் புலியைப் போல பணியாற்றியுள்ளனர். ஒரு சின்ன அதிருப்தியில் கட்சியை விட்டு சென்றுவிட மாட்டார்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு அனைவரும் காங்கிரஸில் ஒற்றுமையாக செயல்படுவோம்.

மும்பையில் இருந்து வந்து எங்களோடு பேச வேண்டும். அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அத்தனை கோரிக்கைகளையும் ஏற்க, கட்சி மேலிடம் தயாராக உள்ளது. ஆட்சியில் அவர்களுக்கு தேவையான அனைத்து மாற்றத்தையும் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு அவர்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்க முடியாது. அவ்வாறு வாக்களித்தால் அவர்கள் எம்எல்ஏ பதவி உடனே பறிபோகும் என சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ந‌ம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சியின் உத்தரவை மீறி வாக்களித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையெல்லாம் அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in