

'மணம் தவிர் இல்லறம்' (லிவ் இன் ரிலேஷன்ஷிப்) கிரிமினல் குற்றமல்ல; அந்த உறவையும் திருமணம் போன்றே ஏற்றுக்கொள்ளத்தக்க நெறியாகவே பார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவித்துள்ளது.
பொது வாழ்வில் பிரபலமாக இருப்பவர் ஒருவர் தனிப்பட்ட வாழ்வில் 'மணம் தவிர் இல்லறம்' நடத்துவதை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தும் நபர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர முடியுமா என்ற வாதம் உச்ச நீதிமன்றத்தில் எழுந்தது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கிரிமினல் அவதூறு வழக்குகள்தான் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கோரி தொடர்ந்த வழக்கு விசாரணையின் போதே இந்த வாதம் எழுந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்வைத்த இந்த கேள்விக்கு மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி தனது பதிலை முன்வைத்தார்.
அப்போது அவர், "மாறிவரும் சமூக கட்டமைப்பில், 'மணம் தவிர் இல்லறம்' கிரிமினல் குற்றமல்ல; அந்த உறவையும் திருமணம் போன்றே ஏற்றுக்கொள்ளத்தக்க நெறியாக பார்க்க வேண்டும். அத்தகைய உறவு கிரிமினல் குற்றமாகாது.
பொது வாழ்வில் ஈடுபட்ட ஒரு பிரபலர் தன் வழக்கமான அலுவல்களுக்குப் பிறகு மாலை வேளையில் அவரது வீட்டில் எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது மற்றவர்களுக்கு அவசியமற்றது. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் 'மணம் தவிர் இல்லறம்' என்பது போன்று ஏதாவது இருந்தாலும்கூட அது அடுத்தவர்களுக்கு தேவையற்றதே.
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது விழாக்களில் பங்கேற்பது, அவர் பதவிக்கான அலுவல்களை மேற்கொள்வது ஆகியன மட்டுமே பொதுமக்கள் கேள்விக்குறியதாகும். 'மணம் தவிர் இல்லறம்' என்பது அவரது தனிப்பட்ட விஷயம். பொது வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இடையே வித்தியாசம் இருக்கிறது" என்றார்.
மேலும் அவர், "1950-களில் ஒருவரது பேச்சு உடனடியாக 5 அல்லது 6 நபரையே அடையும் சூழல் இருந்தது. ஆனால், தொழில்நுட்பம் மேம்பட்டுள்ள, சமூக வலைத்தளங்கள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் ஒருவரது பேச்சு உடனடியாக 5 லட்சம் மக்களை சென்றடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் ஒருவரது மாண்பினை சீர்க்குழைக்கும் வார்த்தைகள் அழியாத தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன" என வாதிட்டார்.
அரசு ஏன் செலவு செய்ய வேண்டும்?
பொது வாழ்வில் உள்ள ஒரு நபர் அவரது மாண்பு பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால் அந்த வழக்கை அவரே ஏற்று நடத்தட்டுமே. அவருக்காக அரசு ஏன் செலவழிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.