

யாகூப் மேமனுக்கு ஆதரவாகவும், அவரது தூக்குத் தண்டனையை எதிர்த்தும் பேசுபவர்கள் மீது தேசவிரோத வழக்கு தொடர வேண்டும் என்று சிவசேனா கடுமை காட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் சாம்னா பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், “மேமனின் மரண தண்டனைக்கு எதிராக பேசுபவர்கள் தேச விரோதிகள். அவரை பெரிய தியாகியாக கட்டமைக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
மும்பை 1993 குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆன்மா, டைகர் மேமன் மற்றும் தாவூத் இப்ராஹிமை பிடித்து சிறையில் அடைக்கும் போதுதான் சாந்தியடையும்.
யாகூப் மேமனின் மரண தண்டனையை ரத்து செய்ய போராடியவர்கள் ஒருவர் கூட குண்டு வெடிப்பில் தங்கள் குடும்பத்தினரை இழந்தவர்களல்லர். எனவே அவருக்கு கருணை காட்டுவது பற்றிய சிக்கல்கள் அவர்களுக்கு இல்லை.
எம்.ஐ.எம். கட்சித் தலைவர் ஓவைஸி கூறலாம், ‘ராஜீவ் காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை என்று கூறலாம், ஆனால் இது யாகூப் மேமனுக்கு கருணை வழங்குவதற்கான நியாயமாக முன் வைக்கப்பட முடியாதது” என்று கூறப்பட்டுள்ளது.