Last Updated : 18 May, 2014 12:00 PM

 

Published : 18 May 2014 12:00 PM
Last Updated : 18 May 2014 12:00 PM

சொன்னபடி செய்யுங்கள்: அனந்தமூர்த்தி, தேவகவுடாவுக்கு நெருக்கடி: ‘நமோ’ அமைப்பினர் வலியுறுத்தல்

நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறுவேன்' எனக் கூறிய கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி, உடனடியாக பாகிஸ்தானுக்குப் புறப்பட வேண்டும் எனக் கூறி, அவருக்கு ,'நமோ பிரிகேட்' (நமோ பேரவை) என்ற அமைப்பினர் பாகிஸ்தானுக்கு செல்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளனர்.

இதே போல 'மோடி பிரதமரானால் கர்நாடகாவை விட்டே வெளியேறுவேன்' என சூளுரைத்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவை கர்நாடகாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

நாட்டைவிட்டு வெளியேறிய நடிகர்

நரேந்திர மோடி பிரதமரானால் ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்து கொள்வதை கைவிடுவேன். இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என சில மாதங்களுக்கு முன்பு இந்தி ந‌டிகர் கமால் ஆர்.கான் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வெள்ளிக் கிழமை காலை,'மோடி பிரதமராகவுள்ளதால் நாட்டை விட்டு வெளியேறுகிறேன்'என ட்விட்டர் மூலமாக‌ கமால் ஆர்.கான் தெரிவித்திருந்தார்.

இதே போல ‘நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்’ எனக் கூறிய அனைவரையும் இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என நமோ பிரிகேட் அமைப்பினர் கூறி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்குச் செல்ல டிக்கெட்

ஞானபீடம் விருது பெற்ற கன்னட எழுத்தாளரும், அரசியல் விமர்சகரு மான யூ.ஆர்.அனந்த மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “நரேந்திர மோடி பிரதமராவதை நான் விரும்பவில்லை. காந்தியும், நேரும் கனவு கண்ட இந்தியாவை மோடி ஆண்டால்,நாடு அழிவுப் பாதையில் பயணிக்கும்.இந்தியா வில் ஜனநாயகம் காணாமல் போய்விடும்.மோடிக்கு பயந்து மக்கள் உயிர் பாதுகாப்பு தேடி வேறு நாடுகளுக்கு ஓடுவார்கள்.நானும் நாட்டை விட்டே வெளியேறுவேன்''எனக் கூறி இருந்தார்.

தற்போது மோடி பிரதமராவது உறுதியாகிவிட்டதால், பெங்களூரில் உள்ள யூ.ஆர்.அனந்த மூர்த்தி வீட்டை நமோ பிரிகேட் அமைப்பினர் சனிக்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது அனந்த மூர்த்தி வீட்டில் இல்லாததால் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான டிக்கெட்டை அங்கிருந்த தபால் பெட்டியில் நமோ பிரிகேட் அமைப்பினர் போட்டுவிட்டுச் சென்றனர்.

தேவகவுடா வீடு முற்றுகை

இதே போல முன்னாள் பிரதமர் தேவகவுடா கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ஹாசனில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, “பா.ஜ.க. ஒருபோதும் தனி பெரும்பான்மை பெற முடியாது.அவ்வாறு பெற்றால் நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடுகிறேன்.அதேபோல் மோடி பிரதமரானால் கர்நாடகாவை விட்டே வெளியேறுவேன்''என கூறியிருந்தார்.

எனவே நமோ பிரிகேட் அமைப்பினர் சோமசேகர் கவுடா தலைமையில், பெங்களூரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வீட்டை முற்றுகையிட்டனர். “தேவகவுடா தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்று கோஷமிட்டனர்.

இது தொடர்பாக மங்களூரை சேர்ந்த நமோ பிரிகேட் அமைப் பினை சேர்ந்த நரேஷ் ஷெனாய் கூறுகையில், “கர்நாடகாவை விட்டு தேவகவுடா வெளியேறினால் குஜராத்திற்கு வர வேண்டும் என மோடி பதில் சொல்லி இருந்தார். எனவே தேவகவுடாவிற்கு குஜராத் செல்வதற்கான டிக்கெட் எடுத்திருக்கிறோம்.

யூ.ஆர்.அனந்த மூர்த்தி பாகிஸ்தான் செல்வதற்கு தேவையான பணத்தை அவருக்கு மணி ஆர்டரில் அனுப்ப இருக்கிறோம்.முதல் கட்டமாக நான் 100 ரூபாய் அனுப்பி இருக்கிறேன்''என்றார்.

கன்னட எழுத்தாளர்கள் கண்டனம்

கன்னட எழுத்தாளர் ஜெய் பிரகாஷ் கூறுகையில்,“யூ.ஆர்.அனந்த மூர்த்திக்கும்,தேவகவுடாவிற்கும் கர்நாடகாவில் வாழ்வதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது.அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என கூறுவது அறிவற்ற செயல்.இதனை அனைத்து கன்னட எழுத்தாளர்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x