

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை யைத் தொடங்கினர். இதுதொடர் பாக 40 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் முகாமிட்டுள் ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசுப் பணியிடங்களுக்கு அந்த மாநில தொழில் முறை தேர்வு வாரியம் (வியாபம்) தகுதித் தேர்வு களை நடத்தி வருகிறது. இதில் கடந்த 1997 முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப் பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மருத்துவப் படிப்பில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத் தமாக 100-க்கும் மேற்பட்ட வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊழல் தொடர்பாக இதுவரை 2,800 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஊழல் விவகாரத்தில் தொடர்பிருப்ப தாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் வியாபம் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 47 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த ஊழல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், வியாபம் ஊழல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 40 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் நேற்று மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு வந்தனர்.
இந்தக் குழுவுக்கு இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். இதுவரை இந்த வழக்குகளை விசாரித்து வந்த 13 சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அனைத்து வழக்கு விவரங்களையும் நேற்று சிபிஐ வசம் ஒப்படைத்தனர்.
வரும் 24-ம் தேதிக்குள் முதல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே முதல் நாளிலேயே சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியபோது, முதலில் சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் பதிவு செய்துள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடத்துவோம். இதைத் தொடர்ந்து வியாபம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்ற மாநில அரசிடம் கோருவோம் என்று தெரிவித்தன.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
வியாபம் ஊழலுக்குப் பொறுப்பேற்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று போபால் வந்தார். அவரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே முதல்வர் சவுகான் பதவி விலகக் கோரி வரும் 16-ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அதே நாளில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.