பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்ட விழாவில் சோகம்: நெரிசலில் சிக்கி 2 பெண்கள் பலி - 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்ட விழாவில் சோகம்: நெரிசலில் சிக்கி 2 பெண்கள் பலி - 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதி
Updated on
1 min read

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று 2 பெண்கள் உயிரிழந்தனர்.

காயமடைந்த 15 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகந்நாதர் கோயில் உலகப் புகழ் பெற்றது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வைணவ கோயிலில் 9 நாட்கள் நடைபெறும் திருவிழா மற்றும் தேரோட்டத்தை காண நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

16 சக்கரங்களைக் கொண்ட பிரம்மாண்டமான தேரில் பூரி ஜெகந்நாதர், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பலராமர், 12 சக்கரங்கள் கொண்ட தேரில் சுபத்ரா தேவி ஆகியோர் எழுந்த ருள்வார்கள். ஆண்டுதோறும் 9 நாட்கள் இந்த தேரோட்டம் நடைபெறும்.

இந்த ஆண்டு இப்பெரும் விழா நேற்று தொடங்கியது. தேரோட் டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பூரி நகரமே திணறியது. பலராமரின் தேர் பாலகாந்தி சதுக்கம் பகுதியில் வந்தபோது, தேருக்கு அருகே வந்து தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் முண்டியடித்தனர். அப்போது கடும் நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் கீழே விழுந்த ஒரு பெண் மிதிபட்டு உயிரிழந்தார்.

அதேபோல தேர் மரிச்காட் பகுதிக்கு வந்தபோது மீண்டும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி கீழே விழுந்த ஒரு பெண் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இரு சம்பவங்களிலும் சுமார் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந் தவர்களில் ஒருவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியாவார். உயிரிழந்த இருவரும் யார் என்பது அடையாளம் கண்டு பிடிக்கப்படவில்லை.

இத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள், அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே ரூ.5 லட்சத் துக்கு விபத்துக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in