

60 உறுப்பினர்களிலிருந்து 12 உறுப்பினர்களாக இடதுசாரிகளின் மக்களவைப் பிரதிநிதித்துவம் சரிவடைந்தது இடது அரசியல் அனுதாபிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அலையை எதிர்கொள்ள புதிய உத்திகளையும் அணுகுமுறைகளையும் ஏற்படுத்த இடதுசாரித் தலைமைத் தவறிவிட்டது என்றும் மாறிவரும் உலகிற்கேற்ப தங்களது கொள்கையையும் நவீனமயமாக்கியிருக்கவேண்டும் என்ற கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர் இது பற்றி வெளிப்படையாகவே தனது கோபத்தை வெளியிட்டதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி ஆகியோர் தோல்விக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் வேட்பாளர் தேர்வுகள் மோசமாக அமைந்தது என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சிபிஎம் கட்சிக்கு 9 இடங்களே கிடைத்துள்ள நிலையில் இந்தியாவின் இரண்டாவது பழையக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கோ ஒரே இடம்தான் இந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்துள்ளது.
2011ஆம் ஆண்டிற்குப் பிறகு அதே தலைமையை மேற்குவங்கத்தில் நீடிக்க வைத்தது பெரும் தவறு, இதனால்தான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சரியாக எதிர்கொள்ள முடியாமல் போயுள்ளது என்றும் கட்சிக்குள் கருத்துக்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து மூத்த தலைவர் ஒருவர் தனது அதிருப்தியை வெளியிடுகையில், "பாரக்பூர் தொகுதியில் சுபாஷிணி அலி என்பவர் ஏன் போட்டியிட்டார் என்பதற்கான நியாயமான காரணங்கள் இல்லை, அங்கு அவருக்கு ஆதரவு இல்லை, சுபாஷிணி அலி சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத், மற்றும் பிருந்தா காரத் ஆகியோருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே அங்கு நிறுத்தப்பட்டுள்ளார்" என்று சாடியுள்ளார்.
இடதுசாரித் தலைவர்கள் தோல்வி பற்றி சீரிய முறையில் சுயபரிசீலனையில் இறங்கவேண்டும் இல்லையெனில் புதிய கட்சியான ஆம் ஆத்மி இடது அரசியலை ஓரங்கட்டிவிடும் என்றும் இடதுசாரிக் கட்சி அனுதாபிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.