

ஒடிசாவில் குடும்ப கவுரவம் என்ற போர்வையில் காதலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பெண் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.
இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சிக்கு அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது தாயும் வந்திருந்தனர். காதல் விவகாரம் தெரியாமல் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
விருந்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு நேரத்தில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஹலாதிபதாராவில் உள்ள தன் காதலன் வீட்டில் அந்த பெண் தங்கியுள்ளார்.
இதனை அறிந்த பெண்ணின் சகோதரர்கள், காதலன் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து, பென்னை தங்களுடன் வீட்டிற்கு வர அழைத்துள்ளனர். காதலனை பிரிந்து வர அந்த பெண் மறுத்ததால், கோபமடைந்த சகோதரர்கள் இருவரையும் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இருவரது உடல்களையும் ரத்த வெள்ளத்தில் கைப்பற்றிய காவல்துறை அதிகாரி ஏ.கே. சிங், கொலையாளிகள் தப்பிவிட்டதாகவும், பெண்ணின் தந்தையிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.