

தன் காரை மீறி சென்ற லாரி மீது கொண்ட கோபத்தால் அதில் கொண்டு செல்லப்பட்ட 30 எருதுகளை அவிழ்த்து விட்டார் உபியின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி எம்.எல்.ஏ. நேற்று முன் தினம் நடந்த சம்பவத்தில், எருதுகளை தேடி ராஜஸ்தான் போலீஸார் வீடு வீடாக அலைந்தனர்.
மெயின்புரியின் நகர தொகுதியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜ்குமார் யாதவ். இவர், தம் சொந்த பணியை அருகிலுள்ள ராஜஸ்தானின் கோட்டாவில் முடித்து விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை 30 எருதுகளை ஏற்றி வந்த ஒரு லாரி வேகமாக மீறிச் சென்றது.
இதனால், கடும் கோபம் கொண்ட ராஜ்குமார் தன் ஓட்டுநரிடம் அந்த லாரியை மடக்குமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. பிறகு சிறிது நேரத்தில் விரட்டி பிடிக்கப்பட்ட லாரியில் இருந்த எருதுகளை அவிழ்த்து விட்டார் எம்.எல்.ஏ. தொடர்ந்து கால்கள் தெறிக்க ஓடிய எருதுகளை அக்கம், பக்கம் இருந்த கிராமவாசிகள் விரட்டிப் பிடித்து வைத்து கொண்டனர். இதை கேள்விப்பட்ட எருதுகளின் உரிமையாளர்கள் அப்பகுதியின் மஹுவா காவல் நிலையத்தில் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர்.
இதன் காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட எம்.எல்.ஏவுடன் பேச்சு வார்த்தை நடத்திய உரிமையாளர்களுக்கு ‘சமரசம்’ ஏற்பட்டது. இதன் ஒரு சரத்துப்படி ஓடிப்போன எருதுகளை தேடிப் பிடித்து ஒப்படைப்பது என முடிவானது. இந்த பணியை வேறு வழியின்றி ஏற்ற ராஜஸ்தான் போலீஸார், அப்பகுதியிலுள்ள கிராமங்களில் கால்கள் வலிக்க அலைந்துள்ளனர். கடைசியில், எருதுகளை பிடித்து வைத்து கொண்ட அங்குள்ள கிராமவாசிகள் வீடுகளின் கதவை தட்டி எருதுகளை மீட்க வேண்டியதாயிற்று.
இது குறித்து ‘தி இந்து’விடம் மஹுவா காவல் நிலைய ஆய்வாளர் மனோகர் லால் தொலைபேசியில் கூறியதாவது, ‘அருகிலுள்ள இறைச்சிக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எருதுகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக எண்ணி தவறுதலாக அவிழ்த்து விட்டு விட்டார் எம்.எல்.ஏ. ஆனால், அவற்றை தேடிப் பிடிப்பதற்குள் படாத பாடு பட்டாகி விட்டது. நல்லவேளையாக அவற்றின் கால்களில் அடையாளத்திற்காக சிவப்பு நிற ரிப்பன் கடப்பட்டிருந்ததால் கண்டுபிடிக்கப்பட்டன.’ எனக் கூறுகிறார்.
இது பற்றி ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது கருத்து கூற மறுத்து விட்டார். இவர், கடந்த மக்களவை தேர்தலில் மெயின்புரியில் போட்டியிட்டு வென்ற தம் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் உபி முதல்வருமான அகிலேஷ்சிங் யாதவிற்கும் மிகவும் நெருக்கமானவர்