திருநங்கைகளுக்கு ‘ஹெல்ப்லைன்’ - மேற்கு வங்க அரசு திட்டம்
திருநங்கைகளுக்கு ஹெல்ப் லைன் வசதியும் அரசு மருத்துவமனைகளில் பாலின உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை வசதிகளும் தொடங்க மேற்கு வங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் புதிதாக திருநங்கைகள் நல வாரியம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநங்கைகளை சமூகத்துடன் ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து நலவாரிய உறுப்பினர் ரஞ்சிதா சின்ஹா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பஸ்கள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்கள் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகளுக்கு தனி இடவசதி அளிக்க முடிவு செய்துள்ளோம்.
வேலைவாய்ப்புகள், பாலின உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ வசதிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு 24 மணி நேர ஹெல்ப் லைன் வசதி விரைவில் தொடங்கப்படும். பாதுகாப்பு மற்றும் பிற உதவிகள் தொடர்பாக இதில் அவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
கிராமப் பகுதிகளில் வாழும் திருநங்கைகளின் பிரச்சினைகளை அறிய அனைத்து மாவட்டங்களிலும் பயிலரங்குகள் நடத்த முடிவு செய் துள்ளோம்” என்றார்.
