

ஆந்திர மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் கோதாவரி புஷ்கரத்துக்குச் சென்ற பெண்கள் 4 பேர் இறந்தனர். மேலும் 26 பேர் காயம் அடைந்தனர்.
விஜயநகரம் மாவட்டம், சிங்கரய்யா கிராமத்தை சேர்ந்த 30பக்தர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை கோதாவரி புஷ்கரத்தில் புனித நீராடுவதற்கு பத்ராசலம் சென்றனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்த பின் திங்கள்கிழமை இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை விசாகப்பட்டினம் அடுத்துள்ள சந்தபாளையம் எனும் இடத்தில் ஒரு பாலத்தின் சுவர் மீது மோதி, சுமார் 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கே. சன்னாசி அம்மாள் (60), புஜ்ஜம்மாள் (54), ரெட்டி சன்னாசி அம்மாள் (62), ரெட்டி தேவுடம்மாள் (58) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் விசாகப் பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஓட்டுநர் தூங்கியதால்தான் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே எட்டாம் நாள் கோதாவரி புஷ்கரத்தில் புனித நீராட நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள கோதாவரி ஆற்றில் குவிந்தனர்.