நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்போம்: ராகுல் காந்தி உறுதி

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்போம்: ராகுல் காந்தி உறுதி
Updated on
1 min read

நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற அனுமதிக்க மாட்டோம். ஓர் அங்குல இடத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் நேற்று கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது ராகுல் கூறியதாவது:

அடுத்தவாரம் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு திட்ட மிட்டுள்ளது. ஆனால் மசோதா நிறைவேற காங்கிரஸ் கட்சி அனு மதிக்காது. இந்த மசோதாவுக்கு பதிலாக 3 முறை அவசர சட்டத்தை வெளியிட்டுள்ளது நரேந்திர மோடி அரசு.

விவசாயிகளின் ஓர் அங்குலம் நிலத்தை கையகப்படுத்தவும் அனுமதிக்கமாட்டோம். இன்னும் 6 மாதங்களில், பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு 5.6 அங்குலமாகக் குறையும். இந்த நாட்டு மக்களும், காங்கிரஸும், விவசாயிகளும் இதனைச் செய்து முடிப்பார்கள்.

ராஜஸ்தானில் ஆட்சிபுரியும் வசுந்தரா ராஜே அரசு சுதந்திரத்துக்கு முந்தைய பிரிட்டிஷ் அரசு போல செயல்படுகிறது. அப்போது இந்தியாவின் நிர்வாகம் லண்டனில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டது. அதைப்போலவே இந்த அரசும் லண்டனிலிருந்து கட்டுப்படுத்தப் படுகிறது. கருப்புப்பணத்தை குவித்து தப்பிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, லண்டனில் இருந்து வசுந்தரா அரசை ஆட்டு விக்கிறார்.

ஊழல் செய்தவருக்கு முதல்வர் வசுந்தரா உதவி அளித்து இந்திய சட்டங்களை மீறியுள்ளார். ராஜஸ் தானில் பாஜக ஆட்சியோ வசுந்தரா ஆட்சியோ நடக்கவில்லை. லலித் மோடி அரசு நடக்கிறது.

ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி இப்போது ஊழல் பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கிறார்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட் டுள்ள கருப்புப்பணத்தை மீட்டு வந்து இந்தியாவில் வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் கொடுப்பேன் என்று சொன்ன வர் நரேந்திர மோடி. லட்சக்கணக் கான கோடி ரூபாய் பணத்துடன் லண்டனில் உள்ளார் லலித் மோடி. அவரை மத்திய அரசு இந்தியா அழைத்துவரட்டும்.

ராஜஸ்தானில் அவர் நடத்தும் ஆட்சியை அகற்றி மக்கள் அரசை அமைக்கட்டும்.

முந்தைய முறை பதவி வகித்த போது முதல்வரும் லலித் மோடியும் முதல்வரின் மகன் ஹோட்டலில் முதலீடு செய்து கூட்டாக தொழில் நடத்தினர். அந்த ஓட்டலும் அரசுக்கு சொந்தமான சொத்து.

ராஜஸ்தானில் லலித் மோடி அரசு, மத்தியப் பிரதேசத்தில் ‘வியாபம் அரசு’, மகராஷ்டிரத்தில் ‘முண்டே அரசு’, சத்தீஸ்கரில் ‘தான அரசு’ நடக்கிறது. 56 அங்குல தைரியமான மார்பைக் கொண்ட பிரதமர் மோடி இதுபற்றி வாய்திறப் பதில்லை. வசுந்தரா ராஜேவின் ஆட்சியில் ராஜஸ்தானில் 17,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in