பெங்களூரு நகைக்கடையில் கொள்ளை முயற்சி: சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள் கைது - பொதுமக்கள் சாதுர்யமாகப் பிடித்தனர்

பெங்களூரு நகைக்கடையில் கொள்ளை முயற்சி: சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள் கைது - பொதுமக்கள் சாதுர்யமாகப் பிடித்தனர்
Updated on
1 min read

பெங்களூருவில் நகைக் கடைக்கு சாக்கடை வழியாக சுரங்கம் அமைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். பொதுமக்களின் சாதுர்யத்தால் பெரும் கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ள தாக காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

பெங்களூருவில் பன்னார‌கட்டா சாலையில் உள்ள ஜேபி நகரில் பிரியதர்ஷனி ஜூவல்லர்ஸ் என்ற தங்க, வெள்ளி நகைக் கடை இருக்கிறது. இதன் உரிமையாளர் ராஜூ வெளியூருக்கு சென்றதால், கடந்த சில தினங்களாக நகைக் கடை மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று முன் தினம் இரவு இறந்ததால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இறந்தவரின் உறவினர்கள் ரமேஷ், ரகு உள்ளிட்டவர்கள் சாலைக்கு அருகில் அமர்ந்து நேற்று குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது பிரியதர்ஷனி நகை கடைக்கு 5 அடி தூரத்தில் இருக்கும் நடைபாதையின் கீழ் உள்ள சாக்கடையில் கல் உடைக் கும் சத்தம் கேட்டுள்ள‌து. மேலும் சாக்கடைக்குள் இருந்து அவ்வப் போது, வெளிச்சமும் புகையும் வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ரமேஷ், நகைக் கடைக்கு அருகில் சென்று சாக்கடையை பார்த்த போது ஆட்கள் இருப்பதை பார்த்தார். அவர்கள் நகைக் கடைக்கு சுரங்கம் தோண்டுவது தெரியவந்தது.

இதையடுத்து ஜேபி நகர் காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். மேலும் குற்றவாளிகள் தப்பி செல்லாத வாறு சாக்கடையில் இரு முனை களிலும் பாதுகாப்புக்காக உற வினர்களை நிறுத்தி வைத்தார். இதையடுத்து சம்பவ இடத் துக்கு வந்த காவலர்கள், நடைப் பாதையின் கற்களை அகற்றும் பணியில் இறங்கினர்.

இந்த சத்தத்தைக் கேட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து சாக்கடை மூலமாக தப்பியோட முயற்சி செய்தனர். அப்போது மறு முனையில் இருந்த காவலர் களும், பொதுமக்களும் கொள்ளை யர்கள் 4 பேரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜேபி நகர் காவல்துறையினர் கூறியதாவது:

கொள்ளையடிக்க முயற்சித்த ஏ.எஸ். கபீர் (29), உசேன் (25), சலீம் (30), இஸ்மாயில் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரிடம் இருந்து நகை கடையில் சுரங்கம் அமைக்கப் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களும், ராட்சத அறுவை இயந்திரங்களும், செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் சாதுர்யமாக செயல்பட்டதால், பெரும் கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட நால்வரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து கொள்ளை சம்பவங் களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதுவரை பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நகைக் கடை கொள்ளையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in