

இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற திங்கள்கிழமை, பாஜகவிற்கு வாக்களிக்குமாறு நரேந்திர மோடி வேண்டு கோள் விடுக்கும் வீடியோ வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்ட மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 41 தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் வாரணாசியில் நிலவும் இந்து – முஸ்லிம் ஒற்றுமை குறித்தும், வாக்காளர்கள் அனைவரும் நல்லிணக் கத்தையும், ஒற்றுமையையும் வெளிப் படுத்தும் வகையில் தங்களின் வாக்கு களை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியும் நரேந்திர மோடி பேசிய வீடியோ பதிவு இணையதளத்தில் வெளியானது. அதை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி செயலாளர் மற்றும் அக்கட்சியின் சட்டப்பிரிவு பொறுப்பாளர் கே.சி. மிட்டல், தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: “வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு மோடி செய்த பிரச்சாரம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன்படி தவறாகும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “மோடியின் பேச்சை ஒளிபரப்பியதன் மூலம் தேர்தல் விதிமுறை மீறலில் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் ஈடுபட்டுள்ளன.
எனவே மோடியின் மீதும், தொலைக் காட்சி சேனல்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் மோடி
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மோடி மீது இந்த தேர்தலில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப்ரல் 7-ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை மோடி உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பிற கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 9-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது வதோதரா தொகுதியில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதை தொலைக் காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. அதே போன்று ஏப்ரல் 24-ம் தேதி 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற போது, வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய அவர் ஊர்வலமாகச் சென்றதையும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. ஏப்ரல்
30-ம் தேதி காந்திநகரில் வாக்களித்த பின்பு, தாமரை சின்னத்தைக் காட்டி மறைமுகமாகப் பிரச்சாரம் செய்தார்.