

தொழிற்சங்கங்களின் ஒருமித்த கருத்தைப் பெற்று, தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு, தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.
இந்திய தொழிலாளர் மாநாட் டின் 46-வது அமர்வை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தொழிலாளர் நல சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்து அச்சங்கங்களுடனான ஆலோசனை தொடரும்.
தொழிற்துறையைப் பாதுகாப் பது தொடர்பான பேச்சு, தொழிலதி பர்களைப் பாதுகாப்பதில் போய் முடிகிறது. எனவே தொழிற்துறைக் கும், தொழிலதிபர்களுக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொள்வது அவசியம். அதைப்போலவே அரசுக்கும் நாட்டுக்கும், தொழி லாளர்களுக்கும் தொழிலாளர் அமைப்புகளுக்கும் இடையே மெல்லிய கோடு உள்ளது. சரிசமமான அணுகுமுறையைக் கையாண்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்.
தொழில்சார்ந்த துறைகளில் தொழில்பழகுநர்களின் எண் ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தற்போது 3 லட்சமாக உள்ள இந்த எண்ணிக்கையை 20 லட்சமாக உயர்த்துவதற்கு தொழில்நிறுவனங்கள் போதுமான வாய்ப்பு அளிக்க வேண்டும்.
சீனாவில் தொழில்பழகுநர்க ளின் (அப்ரன்டிசெஸ்) எண்ணிக்கை 2 கோடியாகவும், ஜப்பானில் ஒரு கோடியாகவும், ஜெர்மனியில் 30 லட்சமாகவும் உள்ளது.
நாம் மேம்பட வேண்டுமெனில் நமது இளைஞர்களுக்கு வாய்ப் பளிப்பது அவசியம். தொழில் பழகுநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே தற்போதைய தேவை. வேலைவாய்ப்பற்று இருப்பவர் களின் பக்கம் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
தொழில்பழகுநர்களுக்கு, நிறு வனங்கள் நீண்ட காலம் கதவை அடைத்து வைத்திருக்க முடியாது.
தொழிலாளர்களின் புத்தாக்க திறனை யாரும் அங்கீகரிப்ப தில்லை. இந்த நிலைமையை மாற்ற நான் விரும்புகிறேன். தொழிலாளர்களுக்கு அளிக்கப் படும் மரியாதையை உயர்த்துவதற் கான வழிகளை அரசு, தொழிற் துறை, தொழிலாளர் அமைப்புகள் சிந்திக்க வேண்டும்.
தொழிலாளர்களின் முக்கியத்து வத்தை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் மரபார்ந்த திறனைப் பாராட்டி அரசு சான்றிதழ் வழங்கும். தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இல்லையெனில் தேசம் மகிழ்ச்சி யாக இராது. இந்திய சமூகத்தில் தொழிலாளர்களுக்கு போதுமான மரியாதையை அளிப்பதில்லை.
தொழிலாளர் நலச் சட்டங்கள் சிக்கலானவையாக இருக்கின்றன. அவற்றை எளிமைப்படுத்த வேண் டும். ஏழைகளும் தங்களின் உரி மையை உணர்ந்து அவற்றைப் பெறும் வகையில் இச்சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். நான் வறுமையைப் பார்த்திருக் கிறேன், அனுபவித்திருக்கிறேன். மற்றவர்கள் சொல்லியோ, ஒரு புகைப்படக்காரருடனோ ஏதாவது ஓரிடம் சென்று வறுமையைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவை யில்லை.
தொழிலாளர் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது. மாதம் குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள், ஆன்லைன் பிஎஃப் கணக்குகள் போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் முறைசாரா தொழிலாளர்களுக்கும் பயனிக்கும்.
தொழிலாளர்களின் ஆரோக்கி யம் தொடர்பான அனைத்து மருத் துவ தகவல்களும் ஆன்லைனில் தற்போது கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து பேசிய பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் பி.என். ராய் பேசும்போது, “அதிவேக பொருளாதார வளர்ச்சி என்பது தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது” என்றார்.