

கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தாமல் இருப்பதற்காக ரூ. 100 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வினி ராவ் மற்றும் 3 அதிகாரிகள் மீது சிறப்பு புலானாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் லோக் ஆயுக்தா சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சோனியா நரங் பெயரை பயன்படுத்தி லோக் ஆயுக்தா போலீஸார் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சோனியா நரங் மற்றும் உப லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது லோக் ஆயுக்தா நீதிபதியாக இருக்கும் பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், சில அதிகாரிகளுடன் சேர்ந்து பலரிடம் ரூ. 100 கோடி வரை லஞ்சம் வாங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டது.
அரசு அதிகாரிகளிடம் சோதனை நடத்தாமல் இருப்பதற்காக அவர் களிடம் லோக் ஆயுக்தா போலீஸாரே லஞ்சம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதுபோல 23 அதிகாரிகள் ரகசியமாக புகார் அளித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், சோனியா நரங் விசாரிக்க நீதிபதி பாஸ்கர் ராவ் தடை விதித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய தால் இந்த உத்தரவை அவர் திரும்ப பெற்றார்.லோக் ஆயுக்தா லஞ்சப் புகாரை விசாரிக்க சோனியா நரங் தலைமையில் சிறப்பு புலானாய்வு பிரிவை கர்நாடக அரசு அமைத்தது. இதில் நீதிபதியின் மகன் அஸ்வினி ராவ் மற்றும் 3 முக்கிய அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் சோனியா நரங் நேற்று வழக்கு பதிவு செய்தார்.
இதனிடையே அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் மீதான புகாரை சோனியா நரங் தலைமையிலான குழு விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று மாலை இடைக்கால தடை விதித்தது.