

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டை பகுதியில் ஆளில்லா கருவிகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதை முறியடிக்கும் பொருட்டு, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை, வானில் விமானங்கள் மற்றும் கருவிகள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை அவர்களின் அச்சுறுத்தல் மத்திய உளவுத் துறையினரால் அதிக கவனத்துடன் பார்க்கப்படுகிறது. இதற்கு சமீப காலமாக நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்துள்ள பகைமை மற்றும் எல்லையில் தொடரும் மோதல்களும் ஒரு காரணம்.
இதனால், ஆளில்லா விமானம் அல்லது பறக்கும் கருவிகள் மூலமாக லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது” என்றனர்.
இதையொட்டி மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு படையினரால் டெல்லி மற்றும் சுற்றுப்பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றும் டெல்லி செங்கோட்டை மற்றும் பேருந்து நிலையங்களில் வானில் பட்டங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய இத்தடை உத்தரவு ஆகஸ்ட் 18 வரை அமலில் இருக்கும்.
இதன்படி, டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள, உ.பி., ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் வானில் ஆளில்லா விமானம் மற்றும் ராட்சத பலூன், பாராகிளைடர், பாராமோட்டார், பாராசைல் போன்ற பறக்கும் கருவிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் டெல்லியின் 11 மாவட்டங்களின் அனைத்து காவல் நிலைய போலீஸாரும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் டெல்லியின் சந்தைகள் மற்றும் கடைத் தெருக்களில் வியாபாரிகளிடம் தங்கள் கடைகள் மற்றும் அந்தப் பகுதிகளில் உள்ள குப்பை கூடைகளை மூடி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. குப்பை கூடைகள் திறந்திருக்கும் பட்சத்தில் அதில் வெடிபொருட்களை வீசிவிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனவும் மத்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பிரதமர் உரையாற்றும் செங்கோட்டையில் ‘ஆபரேஷன் லால் கில்லா’ என்ற பெயரில் இந்தோ திபெத்தியன் எல்லைப் போலீஸ் படையின் 20 மோப்ப நாய்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில் இந்த போலீஸாரை சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கும்படி இந்த ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மோடியின் பதவியேற்பு விழா, அவர் கலந்துகொண்ட சர்வதேச யோகா தினம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருகை தந்த நிகழ்ச்சி ஆகியவற்றில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையின் மோப்ப நாய்கள் சிறந்த முறையில் பணியாற்றியதாக கருதப்படுவதே இதற்கு காரணம்.