Published : 22 Jul 2015 10:03 AM
Last Updated : 22 Jul 2015 10:03 AM

லலித் மோடி, வியாபம் ஊழல் விவகாரங்களால் மாநிலங்களவையில் கடும் அமளி; ஒத்திவைப்பு

வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரங்களால் மாநிலங்களவை நேற்று முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 21 நாட்கள் கொண்ட இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மக்களவை நேற்று கூடியதும் அண்மையில் காலமான ரட்லம் (மத்தியப் பிரதேசம்) தொகுதி பாஜக உறுப்பினர் திலீப் சிங் புஹாரியாவின் மறைவுக்கும் 11 முன்னாள் உறுப்பினர் களின் மறைவுக்கும் அஞ்சலி செலுத் தப்பட்டது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் தொகுதி எம்.பி. கடியம் ஹரி கடந்த ஜூன் 11-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள் வதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையில் அறிவித்தார்.

காங்கிரஸ் போர்க்கொடி

மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் விவகாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா எழுப்பினார்.

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

இதே கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தி யது. அந்தக் கட்சியின் பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி அவையில் பேசியபோது, ஊழல் விவகாரங் களுக்கு விவாதம் தீர்வாக முடியாது.வியாபம், லலித் மோடி விவகாரங்கள் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெற சவுகான், வசுந்தரா ராஜே, சுஷ்மா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில் கூட்டத்தொடரை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் கூடி அரசுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.

அருண் ஜேட்லி விளக்கம்

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக் குப் பதிலளித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம் தொடர்பான விவாதத் துக்கு அரசு தயாராக உள்ளது, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவையில் விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜேட்லியின் விளக்கத்தை ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவையில் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் நோக்கி பேரணி

மழைக்கால கூட்டத் தொடர் நடை பெற்றுக்கொண்டிருந்தபோது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி காங்கிரஸ் மகளிர் அணியினர் பேரணி நடத்தினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வியாபம் ஊழல் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் சார்பில் இன்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x