சவுகான், வசுந்தரா, சுஷ்மா பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றம் செயல்படாது: காங்கிரஸ் திட்டவட்டம்

சவுகான், வசுந்தரா, சுஷ்மா பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றம் செயல்படாது: காங்கிரஸ் திட்டவட்டம்
Updated on
1 min read

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றம் செயல்படாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அஸ்வினி குமார் டெல்லியில் நேற்று கூறியதாவது:

ஊழல் விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது, ஊழலை எதிர்ப்பது ஆகியவை எதிர்க்கட்சிகளின் கடமை. அதைத்தான் காங்கிரஸ் செய்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜக கடைப்பிடித்த அதே கொள்கையையே இப்போது நாங்கள் பின்பற்றுகிறோம். எங்களது ஆட்சியின்போது பாஜக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. வியாபம், லலித் மோடி விவகாரங்களில் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் பதவி விலகுவதுதான் பொருத்தமானது.

வியாபம் ஊழல் வழக்கில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மூவரும் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றம் செயல்படாது. இரு அவைகளையும் நடத்துவதா, வேண்டாமா என்பது அரசின் விருப்பம். முடிவெடுக்க வேண்டியது நாங்கள் அல்ல, ஆளும் கட்சிதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆனால் வியாபம், லலித் மோடி விவகாரங்களால் கூட்டத்தொடரின் முதல் வாரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடங்கியது.

இனிமேலும் அதே கொள்கையை கடைப் பிடிப்போம் என்று காங்கிரஸ் அறிவித் திருப்பதால் கூட்டத் தொடர் முழுவதும் முடங்கக்கூடும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in