

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஏ.எம். கிருஷ்ணா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், தமிழகம், குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்துக்கு வந்து செல்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே தெற்கு, மேற்கு, வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்காக அந்தப் பிராந்தியங்களில் தலா ஓர் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும். தென்மாநிலங்களின் நலனுக்காக சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் அருண்குமார் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.என். கிருஷ்ணமணி ஆஜரானார். சென்னையில் உயர் நீதிமன்ற குழு அமைப்பதற்கு ஆதரவாக சட்ட ஆணையம், நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வாதாடினார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மனுதாரரின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் உடனடியாக உத்தரவிட முடியாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.