

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்திருக்க வேண்டும் என பரிந்து பேசியவர்கள் தேச துரோகிகள் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், "யாகூப் மேமனுக்காக பரிந்து பேசியவர்கள் அனைவரும் தேச துரோகிகள். அவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட வேண்டும். மேலும், மக்கள் மனதில் யாகூப் மேமன் தியாகி போன்ற உருவகப்பட்டுவிடாமல் அரசு கவனமாக செயல்பட வேண்டும்.
யாகூப் மேமனிக்கு கருணை காட்ட வேண்டும் என வெறும் 50 பேர் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த 50 பேரில் எவருமே 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தன் நெருங்கிய சொந்தங்களை பறிகொடுக்கவில்லை.
அனால், குடியரசுத் தலைவரும், உச்ச நீதிமன்றமும் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து யாகூப் மேமனுக்கு கருணையோ, தண்டனைக் குறைப்போ செய்யவில்லை.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தாவூத் இப்ரஹிம், டைகர் மேமன் ஆகியோர் பாகிஸ்தான் தப்பி ஓடினர். அவர்களுடன் யாகூப் மேமனும் பாகிஸ்தான் தப்பிச் சென்றவரே. அவர் இந்தியாவுக்கு திரும்பினார் என்ற காரணத்தால் மட்டுமே அவருக்கு கருணை வழங்கியிருக்க தேவையில்லை. யாகூப் மேமனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது" என சேனா தெரிவித்துள்ளது.