புஷ்கரத்தில் 29 பேர் உயிரிழப்புக்கு கூட்ட நெரிசலே முக்கிய காரணம்: மத்திய உள்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை

புஷ்கரத்தில் 29 பேர் உயிரிழப்புக்கு கூட்ட நெரிசலே முக்கிய காரணம்: மத்திய உள்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை
Updated on
2 min read

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் கோதாவரி மஹா புஷ்கர புனித நீராடல் விழாவின்போது 29 பக்தர்கள் பலியானதற்கு கூட்ட நெரிசலே காரணம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் கோதாவரி மஹா புஷ்கரம் எனும் புனித நீராடல் விழா 144 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இவ்விழா தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி அருகே உள்ள கோட்ட கும்மம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், விசாரணை நடத்திய கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் அருண் குமார் மத்திய உள்துறைக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் நேற்று அறிக்கை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:

கோதாவரி புஷ்கரம் விழாவின் தொடக்க நாளில் கோட்டகும்மம் பகுதியின் முதல் நுழைவு வாயிலில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குளிக்கும் பகுதிக்கு செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதில் பலர் கீழே விழுந்ததைப் பொருட்படுத்தாமல் மற்ற பக்தர்கள் அவர்களை மிதித்துக்கொண்டே ஆற்றுக்குள் ஓடினர். இவர்களைக் காப்பற்ற முயன்றவர்களும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இந்த சம்பவத்தில் மூச்சுத் திணறி 29 பக்தர்கள் உயிரிழந்தனர்.

அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும், அவர்களால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் நகல் ஆந்திர அரசின் முதன்மை செய லாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் அருண் குமார் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு வருத்தம்

கோதாவரி புஷ்கரம் நடைபெறும் பகுதியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்த்தார். பின்னர் ராஜமுந்திரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோதாவரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், முதல் நாளில் கூட்ட நெரிசல் காரணமாக 29 பக்தர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவம் இனி நடைபெறாத வண்ணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. புஷ்கரம் விழாவில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களும் அவசரப்படாமல் பொறுமையாக நீராட வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

புஷ்கரம் பகுதியில் முதலை

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், வாமனரேவு புஷ்கரம் பகுதியில் நேற்று காலை பக்தர்கள் புனித நீராடினர். அப்போது, திடீரென கோதாவரி ஆற்றில் இருந்து முதலை வெளியே வந்தது. இதைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று முதலையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் புனித நீராடினர்.

கோதாவரி புஷ்கரம் பகுதிகளில் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக வெயில் கொளுத்தியதில் 7 பக்தர்கள் மயங்கி விழுந்தனர். மேலும் பெண் போலீஸ் சுஜாதா என்பவரும் பணியில் இருந்தபோது வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தார். இவர்கள் அனைவரும் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பலர் கீழே விழுந்ததைப் பொருட்படுத்தாமல் மற்ற பக்தர்கள் அவர்களை மிதித்துக்கொண்டே ஆற்றுக்குள் ஓடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in