Published : 18 May 2014 12:00 PM
Last Updated : 18 May 2014 12:00 PM

மோடி அலையில் கரை சேர்ந்த பாஸ்வான்: லாலுபிரசாத், நிதிஷுக்கு பின்னடைவு

பிஹாரில் வீசிய மோடி அலையால் ராம்விலாஸ் பாஸ்வான் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று கரை சேர்ந்துள்ளார். ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

பிஹாரின் 40 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 31, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 7 மற்றும் ஐக்கிய ஜனதா தளத் துக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் பாஜகவுக்கு 22, லோக் ஜன சக்திக்கு 6 மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 3, காங்கிரஸுக்கு 2, தேசியவாத காங்கிரஸுக்கு ஓர் இடம் கிடைத்துள்ளது.

மோடி அலையால் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி மொத்தம் போட்டியிட்ட 7-ல் 6 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ராம்விலாஸ் பாஸ்வான், அவரது மகன் சிராக் பாஸ்வான், சகோதரர் ராம்சந்தர் பாஸ்வான் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இது குறித்து தி இந்துவிடம் பாட்னா உயர் நீதிமன்ற வழக் கறிஞரான பிரஜேஷ்குமார் குப்தா கூறுகையில், ‘தனித்தோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ போட்ட யிட்டிருந்தால் பாஸ்வானுக்கு ஓர் இடம்கூட கிடைத்திருக்காது. முதன்முறையாக ஜாதி, மத எல்லைகள் இன்றி அளிக்கப்பட்ட வாக்குகளில் நிலையான ஆட்சிக்காக மாநிலப் பிரச்சனை களும் ஒதுக்கி வைக்கப்பட் டுள்ளன. இதில் லாலு மற்றும் நிதிஷுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை’ எனக் கூறுகிறார்.

பிஹாரில் லாலுவிடம் இருந்த ஆட்சியை, பாரதிய ஜனதாவுடன் இணைந்து போட்டியிட்டு தட்டிப் பறித்தவர் ஐக்கிய ஜனதா தளத் தலைவரான நிதிஷ்குமார். பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்தர மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து 15 ஆண்டுகால பாஜக கூட்டணியை அவர் முறித்துக் கொண்டார். இதன் பலனாக பாஜக தற்போது ஒரு தனிப்பெரும் கட்சியாக பிஹாரில் உருவெடுத்து வருகிறது.

இங்கு நடைபெற்ற 5 சட்ட மன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலிலும் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. லாலு கட்சிக்கு 3, பாஜக மற்றும் நிதிஷ் கட்சிக்கு தலா ஒரு சீட்டு கிடைத்துள்ளது.

குற்றப்பின்னணி அரசியல்வாதிகள்

குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகள் அதிகம் நிறைந்த பிஹாரில் இந்தமுறை வெறும் ஐந்து பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பப்பு யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் முகம்மது தஸ்லிமுதீன், பாஸ்வான் கட்சியைச் சேர்ந்த ரமா கிஷோர் சிங், பாஜகவில் சதீஷ் சந்தர் துபே மற்றும் நித்தியானந்த் ராய் ஆகியோர் மட்டும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

லாலுவின் நெருங்கிய சகாவான முன்னாள் எம்பி சையது சகாபுதீன் சிறையில் இருந்ததால் மனைவி ஹின்னா சாஹேப்பை நிறுத்தியிருந்தார். இதேபோல் ஐக்கிய தனதா தள முன்னாள் எம்.எல்.ஏ. முன்னா சுக்லா சிறையில் இருப்பதால் மனைவி அன்னு சுக்லாவை சுயேச்சையாக போட்டியிட வைத்தார். இருவரும் தோல்வி அடைந்துள்ளனர். பாஸ்வானின் கட்சியில் போட்டி யிட்ட குற்றப்பின்னணி அரசியல் வாதி சூரஜ்பானின் மனைவி வீனா தேவி வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x