

தெற்கு டெல்லியில் பெண் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து ஒரு பெண்ணை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவான வெளிநாட்டுப் பெண் ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறும்போது, "தெற்கு டெல்லி அர்ஜூன் நகர் பகுதியில் கடந்த செவ்வாய் இரவு ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் 41 வயது பெண் ஒருவர்.
ஆட்டோவில் ஏறிய அவர் பி.வி.ஆர். சகேட் பகுதிய அடைந்தபோது ஆட்டோ ஓட்டுநரிடமிருந்து ரூ.300 கடனாக பெற்றிருக்கிறார். பின்னர் ஒரு கடைக்குச் சென்று குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி வந்திருக்கிறார். சில நிமிடங்களில் அவர் செல்ல வேண்டிய இடம் வந்திருக்கிறது.
ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர், ஆட்டோ ஓட்டுநரிடம் தனது வீட்டுக்கு வந்து ஆட்டோ கட்டணத்தையும், கடனாக வாங்கிய ரூ.300-ஐயும் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
ஆட்டோ ஓட்டுநரும் வீட்டுக்குள் சென்றுள்ளார். வீட்டை உள்புறமாக தாழிட்ட அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரிடமிருந்த செல்ஃபோனையும், பணத்தையும் பறித்துள்ளார்.
பின்னர், மது அருந்துமாறு அந்த நபரை நிர்பந்தித்துள்ளார். அவர் மறுக்கவே மதுவை அவர் முகத்தில் ஊற்றியுள்ளார். பின்னர் அவரது அறைக்கு வேறு ஒரு வெளிநாட்டுப் பெண்ணை அழைத்து வந்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரை வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார். அவரது ஆடைகளை அகற்றுமாறும் நிர்பந்தித்துள்ளார்.
இந்த சம்பவங்களை டான்சானியா பெண் ஒருவர் படம் பிடித்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த ஆட்டோ ஓட்டுநர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது கால் எலும்பு முறிந்துள்ளது. அருகில் இருந்த டாக்ஸியில் ஏறி தப்பித்து வந்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறிய முகவரியில் இருந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளோம். அவருடன் இருந்த டான்சானியா பெண்ணை தேடி வருகிறோம். கைதான பெண் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்" என்றார்.